சென்னை: இந்தியத் திரையுலகில் இசை மேஸ்ட்ரோ என்றும், இசைஞானி என்றும் ரசிகர்களால் அழைக்கப்படும், இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்றும், இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு அக்டோபரில் தொடங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இப்படத்தை மெர்குரி குரூப் இந்தியா தயாரிக்க உள்ளது. தென்னிந்தியப் பொழுதுபோக்கு மற்றும் திரை வணிகங்களை மையமாகக் கொண்ட கனெக்ட் மீடியா என்கிற நிறுவனத்துடன் இணைந்து, மெர்குரி மூவிஸ் என்ற சிறப்புப் பிரிவாகச் செயல்பட உள்ளது. இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தயாரிப்புக் கூட்டணி தென்னிந்தியத் திரைத்துறையில் பொழுதுபோக்கை உலகளாவிய தரத்துடன், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதுடன், ரசிகர்களுக்குச் சிறந்த கதைகளைக் கொண்டு வர முயற்சிக்கும். அடுத்த பத்தாண்டுகளில் உலகளாவிய தொழில்நுட்பத்திற்கு இணையான வளர்ச்சியைத் தென்னிந்தியத் திரைத்துறையில் கொண்டு வருவதில் இந்த கூட்டணி ஒரு ஊக்கியாகச் செயல்படும். இந்த நிறுவனங்களின் கூட்டணிக்கு இளம்பரிதி கஜேந்திரன் என்பவர் தலைவராகச் செயல்படுவார்.