தமிழ் சினிமா யாரை எப்போது ஏற்றுக்கொள்ளும் என்று யாருக்கும் தெரியாது. அது அழகு, அந்தஸ்து எல்லாம் பார்க்காது. உனக்கு திறமையும் கடின உழைப்பும் இருந்தால் அங்கு கோலோச்சலாம். அதற்கு மிகப் பெரிய உதாரணமாக திகழ்பவர் தனுஷ். அப்பா கஸ்தூரி ராஜாவால் துள்ளுவதோ இளமை படத்தில் நாயகனாக அறிமுகமானார். அப்போது அவரை பார்த்த ரசிகர்கள் இதுஎல்லாம் ஒரு மூஞ்சியா என்று கிண்டல் செய்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்து தனுஷ் எதுவும் பேசவில்லை. பின்னர் அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படத்தில் அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். எந்த ரசிகர்கள் இவரை கிண்டல் செய்தார்களோ அவர்களே தனுஷின் நடிப்பை புகழ்ந்து தள்ளினர். இப்படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்து வியந்தவர்களில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் ஒருவர். அன்று முதல் தனுஷுக்கு ஏறுமுகம்தான்.
தனுஷும் ஐஸ்வர்யாவும் காதலிக்க தொடங்கினர். 2004ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனையடுத்து இருவரும் கடந்தாண்டு பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தனர். இதனால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் சேர்த்து வைக்க ரஜினிகாந்த் உள்ளிட்ட குடும்பத்தினர் எடுத்த முயற்சியும் வீண்போனது. தற்போது இருவரும் பிரிந்து அவரவர் பணிகளில் பிஸியாக உள்ளனர். மகன்கள் இருவரும் கொஞ்ச நாள் தனுஷுடன் கொஞ்ச நாள் ஐஸ்வர்யா உடன் இருந்து வருகின்றனர்.