கடந்த 2002 ஆம் ஆண்டு ’துள்ளுவதோ இளமை’ என்ற படம் வெளியாகிறது. திரைக்கதை-வசனம் செல்வராகவன், இயக்கம் கஸ்தூரி ராஜா என டைட்டிலில் போடப்பட்டுள்ளது. யார் இயக்குநர், யார் நடிகர் என்றே தெரியாமல் படம் பார்த்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி. ஒல்லியான நோஞ்சான் உடம்புடன் ஒருவன் ராணுவ உடை அணிந்து கொண்டு ஒட்டு மீசையுடன் வந்து நிற்கிறான் என்று கிண்டலடிக்கின்றனர்.
அந்த நடிகரின் பெயர் தான் தனுஷ். அடுத்த படம் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ’காதல் கொண்டேன்’. இப்படத்தில் உளவியல் சிக்கல் உள்ள மாணவனாக நடித்திருந்தார். தனது ஆரம்ப கால திரைப்பட அனுபவம் குறித்து ஒரு பேட்டியில் தனுஷ் இப்படி கூறியுள்ளார்.
உருவம் :அதாவது துள்ளுவதோ இளமை படப்பிடிப்பு சமயத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் யார் இப்படத்தின் ஹீரோ என்று கேட்டுள்ளார். அதற்கு தனுஷ் நான் தான் என்று சொல்லியிருக்கிறார், அதை கேட்ட அந்த நபர் விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். ஆம், அப்போது தனுஷை பார்த்த யாரும் ஹீரோ என்றே நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஏன் தனுஷே கூட விருப்பம் இன்றித் தான் சினிமாவில் நடித்திருப்பார்.
தன்னம்பிக்கை :ஆனால் அதன்பிறகு தனது தன்னம்பிக்கை மற்றும் திறமையால் தமிழ் சினிமாவின் ஆளுமையாக உயர்ந்துள்ளார். ’திருடா திருடி’ படத்தில் மன்மதராசா பாடலுக்கு தனுஷ் ஆடிய ஆட்டம் தமிழ்நாட்டையே ஆட்டிவைத்தது எனலாம். அதன்பிறகு தனது அண்ணன் இயக்கத்தில் புதுப்பேட்டை படத்தில் நடித்தார். தனுஷ் என்ற நடிகனை ரசிகர்களுக்கு இப்படம் அறிமுகப்படுத்தியது.
ஒரு பள்ளி மாணவன் விதிவசத்தால் ரவுடியாக மாறியதை அவ்வளவு ராவாக இயக்கியிருந்தார் செல்வராகவன். ஆனால் படம் வெளியான போது யாரும் கண்டுகொள்ளவில்லை. காரணம் தனுஷின் உடல்வாகு. இவன் எல்லாம் ரவுடியா இவனால் எப்படி அத்தனை பேரையும் அடிக்க முடியும் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் இதே படம் இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
வெற்றி கூட்டணி: தனது இயல்பான நடிப்பால் படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றிருப்பார் தனுஷ். அதன்பிறகு தான் அந்த வரலாற்று கூட்டணி இணைந்தது. ’பொல்லாதவன்’ வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான படம். இந்த படம்தான் தனுஷ் யார் என்பதை அனைவருக்கும் காட்டியது.
தான் எவ்வளவு பெரிய நடிகன் என்றும் நடிப்புக்கு உடல்வாகு தேவையில்லை என்பதையும், தன்னை பார்த்து சிரித்தவர்களுக்கும் பதிலடி கொடுத்தார். அதுவும் அந்த மருத்துவமனை காட்சியில் டேனியல் பாலாஜியிடம் பேசும் காட்சியில் தனுஷின் நடிப்பு உச்சகட்டம். அதனை தொடர்ந்து ’யாரடி நீ மோகினி’, ’படிக்காதவன்’, ’மாப்பிள்ளை’, ’வேங்கை’ என்று கமர்ஷியல் படங்களிலும் நடித்து தன்னை நிரூபித்தார்.