சென்னை:காமெடி நடிகரான கூல் சுரேஷ் சாக்லேட் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு காதல் அழிவதில்லை, காக்க காக்க, மச்சி என பல படங்களில் நடித்திருக்கிறார். நடிகர் சிம்பு ரசிகரான கூல் சுரேஷ், மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்கு வித்தியாசமான முறையில் ப்ரமோஷன் செய்து சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். அது மட்டுமல்லாது மற்ற நடிகர்கள் படத்தின் முதல் காட்சியின்போது அந்த படத்தின் ஹீரோ கதாபாத்திரம் போன்ற காஸ்ட்யூமில் தியேட்டருக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பல்வேறு திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படத்தின் ப்ரமோஷனுக்காக கூல் சுரேஷை படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு அழைக்கின்றனர். ஆனால், சில நேரங்களில் கூல் சுரேஷ் செய்யும் செயல்கள் அந்த படத்திற்கே பாதகமாக மாறுகிறது. இந்நிலையில் நேற்று மன்சூர் அலிகான் நடித்த ‘சரக்கு’ படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் கூல் சுரேஷ் கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பேசிய கூல் சுரேஷ், “அனைவரையும் பாராட்டி மாலை போடுகிறோம், ஆனால் இந்த விழாவை நன்றாக தொகுத்து வழங்கும் தொகுப்பாளரை யாரும் பாராட்டவில்லை” என கூறிக்கொண்டு சட்டென்று யாரும் எதிர்பாராத நிலையில், தனது கையில் இருந்த மாலையை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பெண்ணுக்கு அணிவித்தார்.