சென்னை:நடிகர் போஸ் வெங்கட் சின்னத்திரையில் மிகப் பெரிய வெற்றி பெற்ற ‘மெட்டி ஒலி’ என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து புகழ் பெற்றார். பின்னர் சிவாஜி, தலைநகரம், கோ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர்.
மேலும், தற்போதும் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் கடந்த 2020ஆம் ஆண்டு 'கன்னிமாடம்' என்ற திரைப்படத்தை இயக்கி இயக்குநராக முத்திரை பதித்தார். தற்போது ம.பொ.சி என்னும் படத்தை இயக்கி வருகிறார்.
பிரபல சின்னத்திரை நடிகை சோனியா போஸ் வெங்கட்டின் மனைவி ஆவார். மேலும், தற்போது சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவராகவும் போஸ் வெங்கட் பதவி வகித்து வருகிறார். நடிகர் மற்றும் இயக்குநருமான போஸ் வெங்கட் திமுக தலைமைக் கழக பேச்சாளராக பல்வேறு திமுக கட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றி உள்ளார்.
இந்த நிலையில், இவரது சகோதரி வளர்மதி மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உயிரிழந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் பெரும் துக்கத்தில் இருந்தனர். இந்த நிலையில், சகோதரி வளர்மதி இறுதிச் சடங்கில் பங்கேற்ற போஸ் வெங்கட்டின் சகோதரரான ரங்கநாதன் தன்னுடைய சகோதரியைப் பார்த்து கதறி அழுதுள்ளார்.