சென்னை:ஏ.எல்விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'மிஷன் சாப்டர்-1'. இப்படம் பொங்கல் பண்டிகையை ஒட்டி வருகிற 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் விஜய், அருண் விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் குமார் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பேசுகையில், “ பொங்கலுக்கு என்னுடைய 2 படங்கள் வருகிறது . இரண்டுமே வெற்றி பெற வேண்டுகிறேன். அருண் விஜய் உடன் தொடர்ந்து 3 படங்களுக்கு இசை அமைக்கிறேன். ஏ.எல் விஜய் உடன் கை கோர்க்கும் படங்கள் எல்லாம் எனக்குப் பக்க பலமாக இருந்திருக்கிறது. இந்த நேரத்தில் நான் நா. முத்துக்குமாரை மிஸ் பண்ணுகிறேன். இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் அருண் விஜய் பேசியபோது, “ என்னுடைய படங்களில் முதல்முறையாக ஒரு படம் பண்டிகையில் வெளியாகிறது. நான் இதுவரை நடித்த படங்களில் அதிகளவில் பொருட் செலவில் எடுக்கப்பட்ட படம் இந்த படம். நாலரை ஏக்கர் அளவில் இந்த படத்திற்குப் படப்பிடிப்பு தளம் அமைக்கப்பட்டு பெரிய செலவில் எடுக்கப்பட்ட படம்” என்றார்.