சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவரது படங்கள் வெளியாகும் நாட்களில் அஜித் ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுவர். இந்த நிலையில் நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 'துணிவு' (Thunivu) திரைப்படம் வெளியானது. இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வருடமாகவே அஜித்தின் திரைப்படம் எதுவும் வெளியாகவில்லை. இது அவரது ரசிகர்களுக்கு பெருத்த வருத்தத்தை ஏற்படுத்தியது. துணிவு படத்திற்கு பிறகு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கிறார் என அறிவிக்கப்பட்ட நிலையில் திடிரென கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கும் 'விடாமுயற்சி' (Vidaa Muyarchi) திரைப்படத்தில் தற்போது அஜித் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களுக்கு பிறகு அஜித் மற்றும் த்ரிஷா காம்போ தற்போது மீண்டும் இணைந்துள்ளது. மேலும் சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ், அர்ஜுன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. விடாமுயற்சி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு சமயத்தில் அஜித் எடுத்த புகைப்படங்கள் மற்றும் அவரது வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகமடைய வைத்தது. ஆனால் படத்தின் அப்டேட் மட்டும் வந்தபாடில்லை. எப்போது விடாமுயற்சி படத்தின் அப்டேட் வரும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து காத்துக் கொண்டு இருக்கின்றனர். மேலும் இந்த பொங்கல் பண்டிகைக்கு எப்படியாவது அப்டேட் வரும் என்று எதிர்பார்த்தனர்.