சென்னை: சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளவர், நடிகர் சிவகார்த்திகேயன். தனது திறமையால் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மாறியவர். நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்டவர், சிவகார்த்திகேயன். கடந்த ஓரிரு ஆண்டுகளில் இவரது நடிப்பில் வெளியான டாக்டர், டான் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் பெரிய வரவேற்பு பெறவில்லை.
இதைத் தொடர்ந்து தற்போது மண்டேலா என்ற வெற்றிப் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் உள்ளது. விஎஃப்எக்ஸ் பணிகள் நிறைய இருப்பதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், அயலான் படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.
இந்த நிலையில், ட்விட்டரில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுப்பதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "எனது அருமை சகோதர சகோதரிகளே நான் ட்விட்டரில் இருந்து சிறிது காலம் தற்காலிகமாக ஓய்வு எடுக்கிறேன். விரைவில் உங்களை சந்திக்கிறேன். அனைவரும் நலமாக இருங்கள். எனது படம் தொடர்பான தகவல்களை எனது குழுவினர் பதிவிடுவார்கள்" என்று தெரிவித்துள்ளார். இந்த திடீர் முடிவு ஏன்? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்த சிவகார்த்திகேயன், அவ்வப்போது தனது படம் குறித்த தகவல்களை ட்விட்டரில் வெளியிட்டு வந்தார். அதேபோல், மற்ற படங்களின் ஃபர்ஸ்ட் லுக், ட்ரெய்லர் போன்றவற்றையும் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது ட்விட்டரிலிருந்து விலகியுள்ளார். தங்களது படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போன்றவற்றை வெளியிட வேண்டும் என்று பலரும் சிவகார்த்திகேயனிடம் கேட்பதால், அவருக்கு தர்மசங்கடமான நிலை ஏற்படுவதாகவும், அதன் காரணமாகவே தற்காலிகமாக ட்விட்டரில் இருந்து விலகியுள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.