சென்னை:சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமே அல்ல, சமூக முன்னேற்றத்திற்கானது என்று கூறி வந்தாலும். சினிமா தொடங்கிய காலத்திலிருந்து பொழுதுபோக்கு மட்டுமே முக்கிய பிரதானமாகப் பார்க்கப்பட்டு வருகிறது. ஆரம்பக் காலத்தில் தியாகராஜ பாகவதர் படங்களை எடுத்துக் கொண்டால் வெறும் பாடல்களாலேயே படம் நிறைந்து இருக்கும். அதில் எந்த வித சமூக சிந்தனையுள்ள கருத்துகள் இருந்ததாக யாருக்கும் தெரியவில்லை. அதில் பொழுதுபோக்கு மட்டுமே முன்னிலையிலிருந்தது.
அதன் பிறகு வந்தவர்களால் சினிமா என்பது சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பார்க்கப்பட்டது. பலரால் சமூக சிந்தனையுள்ள படங்கள் எடுக்கப்பட்டு வந்தன. அது மக்களிடையே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. சினிமா என்றால் கவலையை மறக்க மட்டுமல்ல, கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல தங்களது கருத்துக்களை மக்களிடையே கொண்டு சென்று புரட்சியை ஏற்படுத்த மிக முக்கிய கருவி என மாறியது. ஆனால் காலம் செல்ல செல்ல மீண்டும் பொழுதுபோக்கு மட்டுமே பிரதானமானது.
அதேபோன்று சினிமாவின் முகமும் மாறிவிட்டது. முன்பெல்லாம் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் பெரு நகரங்களில் பல மாதங்கள் ஓடி வெற்றி பெறும் அதன் பிறகுக் கிராமங்களில் திரையிடப்பட்டு அங்கும் ஆண்டுக்கணக்கில் ஓடும். மக்களும் குடும்பம் குடும்பமாகச் சென்று படங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். கொட்டகை தொடங்கி தியேட்டர் வரை ஒரே திருவிழா போன்று கோலாகலமாக இருக்கும். ஆனால் கால மாற்றத்தில் எல்லாம் மாறிப்போனது. மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அதிகரித்தன. வருடக்கணக்கில் ஓடிய படங்களின் ஆயுள் தற்போது மூன்று நாட்களில் வந்து நிற்கிறது.
வெள்ளிக்கிழமை வெளியாகி சனி, ஞாயிறை கடந்து விட்டால் தற்போது அவை தான் வெற்றிப்படங்கள் என்ற நிலை வந்துவிட்டது. முன்பெல்லாம் வெற்றிகரமான 50-வது நாள், 100-வது நாள், 150-வது நாள் என்றெல்லாம் விளம்பரம் வெளியிட்டு விழா நடத்துவார்கள். இன்றோ வெள்ளிக்கிழமை மதியமே படம் வெற்றி பெற்றது என கேக் வெட்டும் நிலை உருவாகி விட்டது. அதை விட இந்தியத் திரையுலக வரலாற்றிலேயே இதுவரை காணாத ஒரு கொடுமை வெற்றிகரமாக இரண்டாவது நாள் என்று போஸ்டர் அடிக்கும் நிலை வந்துவிட்டது.
கரோனா வைரஸ் பாதிப்புக்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகை அதிகரித்துவிட்டது. அதன்பின் மக்களின் மனநிலையும் மாறிவிட்டது. திரையரங்குகளுக்குச் சென்று படம் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பெரிய நடிகர்களின் படங்களை மட்டுமே திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும் என்று அவர்களின் மனநிலையும் மாறிவிட்டது. இதனால் சிறிய படங்கள் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகின்றன. வெள்ளிக்கிழமை வெளியாகும் ஒரு சிறிய படம் நல்ல விமர்சனம், படம் பார்த்தவர்களின் வாய்வழி கருத்துக்களைக் கடந்து திரையரங்குகளில் குறைந்தது ஒரு வாரமாவது ஓடுவது என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
எப்படியும் அடுத்த மாதம் ஓடிடியில் வந்துவிடும் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்ற மக்களின் மனநிலை பல நல்ல சிறிய படங்களை வெற்றி பெறாமல் செய்து விட்டதை சமீபத்திய நிகழ்வுகளில் நாம் கண்கூடாகப் பார்த்துள்ளோம். உதாரணமாக இந்த மாதம் தொடக்கத்தில் வெளியான பல சிறிய படங்களை எடுத்துக்கொள்வோம். அயோத்தி, கொன்றால் பாவம், குடிமகான், என் 4 இந்த திரைப்படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட படங்கள். ஆனால் திரையரங்குகளில் பார்க்க யாருமே வரவில்லை.
இதனால் நல்ல படம் என்ற பெயருடன் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தைக் கொடுத்த படங்களாக மாறிவிட்டன. இதுவே பெரிய நடிகர்களின் படங்கள் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க அடித்துப் பிடித்து ரசிகர்கள் கூட்டம் காத்துக் கொண்டுள்ளனர். சமீபத்தில் உயிர்ப் பலி கூட ஏற்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்?. அதே படத்தை ஒரு மாதம் கழித்து ஓடிடியில் பார்க்கலாம் என்று யாரும் நினைப்பதில்லை. மாறி வரும் பொருளாதார சூழலில் ஒரு குடும்பம் திரையரங்கு சென்று படம் பார்த்தால் ஆயிரக்கணக்கில் பணம் செலவாகிறது அதனால் ஓடிடியில் பார்ப்பதாகச் சொல்கின்றனர்.