சென்னை:அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் அயலான், லால் சலாம், அரண்மனை 4, தங்கலான் ஆகிய தமிழ்த் திரைப்படங்கள் குறித்த செய்தி தொகுப்பைக் காணலாம்
அயலான்:இயக்குநர் ரவிக்குமார் இன்று நேற்று நாளை என்ற டைம் டிராவல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். அந்த படம் கொடுத்த மிகப் பெரிய வெற்றியால் தனது அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்தது.
படத்தின் கிராஃபிக்ஸ் வேலைகள் முடியாத காரணத்தால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிச் சென்றது. இறுதியாகப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் எனப் படத்தின் டீசரை வெளியீட்டு அறிவித்துள்ளனர். படத்தின் டீஸரும் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. குழந்தைகள் விரும்பும் படமாக அயலான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்துக்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
லால் சலாம்:ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.