சென்னை: தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் வந்தாலும், தனது தனித்தன்மையான காமெடிகளால் இப்போது உள்ள 2K கிட்ஸ்கள் வரை பிடித்தமான நடிகராக இருப்பவர், நடிகர் கவுண்டமணி. 70களில் தொடங்கி இப்போது உள்ள தலைமுறையினர் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகராக இருப்பது ஒன்றும் அத்தனை சுலபமானது அல்ல.
அதனால்தான் இவர் மற்றவர்களைக் காட்டிலும் முக்கியமான கலைஞனாக அறியப்படுகிறார். உடுமலைப்பேட்டை அருகே உள்ள ஊரில் பிறந்த சுப்பிரமணி (கவுண்டமணியின் இயற்பெயர்), சினிமாவிற்கு வருவதற்கு முன்பே நாடகங்களில் நடித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி, இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கு முன்பே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகளும் இருந்தனர்.
தொடக்க காலங்களில் நாகேஷ் நடித்த சர்வர் சுந்தரம், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தார். ‘ராமன் எத்தனை ராமனடி’ படம்தான் அவரது முதல் படமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இயக்குநர் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில், பரட்டையாக நடித்த ரஜினிகாந்த்க்கு அல்லக்கையாக வந்து ‘பத்த வெச்சுட்டயே பரட்ட’ என்ற வசனம்தான் இவரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது.
இன்னும் சொல்லப்போனால், இந்தப் படத்தில் ரஜினிகாந்தின் ஊதியத்தை விட, கவுண்டமணியின் சம்பளம் அதிகம் என்றும் கூறப்படுகிறது. அதன் பிறகு பாரதிராஜாவின் சில படங்களில் நடித்தார், கவுண்டமணி. பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ படத்தில் டெய்லராக வரும் கவுண்டமணியும், கல்லாப்பெட்டி சிங்காரமும் செய்யும் நகைச்சுவைகள் இன்று வரை ரசிக்கப்படுகிறது.
அதன் பிறகுதான் அந்த வரலாற்று சிறப்புமிக்க கூட்டணி உருவாகிறது. ஹாலிவுட்டில் புகழ் பெற்ற நகைச்சுவை இரட்டையர்களான லாரல் - ஹார்டிக்கு இணையான ஜோடி தமிழ் சினிமாவில் உருவானது. அதுதான் கவுண்டமணி - செந்தில் கூட்டணி. கவுண்டமணி எப்போதுமே கொஞ்சம் நாடகத் தன்மையுடன் தனது சக நடிகர்களை அடிப்பார்.
அது ரசிகர்களை மகிழ்வித்தது. இதுவே பின்னாளில் வழக்கமாகி விட்டது. எப்போதும் செந்திலை அடித்துக் கொண்டு இருக்கும் காமெடி, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. டாம் அண்ட் ஜெர்ரி போல. இதனை அப்படியே பிடித்துக் கொண்ட இந்த ஜோடி, தமிழ் சினிமாவில் வெற்றிக்கொடி ஏற்றியது.
90கள் மற்றும் 2000 தொடக்கத்தில் கவுண்டமணி காமெடி இல்லாத படங்களே இல்லை என்ற நிலை மாறியது. அனைத்து கதாநாயகர்களும் முதலில் கவுண்டமணியின் கால்ஷீட்டை வாங்கி விட்டு வாருங்கள் என்று சொல்லத் தொடங்கினர். அந்த அளவுக்கு அத்தனை படங்களிலும் கவுண்டமணிதான்.
அதுவும் சத்யராஜ் உடன் இவர் இணைந்து நடித்த படங்கள் எல்லாமே சிரிப்பு சரவெடிதான். நடிகன், வேலை கிடைச்சிருச்சு, ரிக்ஷா மாமா, மாமன் மகள், வில்லாதி வில்லன் என சொல்லிக்கொண்டே போகலாம். நாடக காலத்தில் இருந்தே வசனங்களுக்கு ஏதாவது கவுண்ட்டர் கொடுத்து பேசிவிடுவதால், இவருக்கு கவுண்ட்டர் மணி என பெயர் வந்தது.