சென்னை: நடிகை மனோரமா தஞ்சையில் உள்ள மன்னார்குடியில் 1937ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் கோபிசாந்தா. சிறு வயதில் கோபிசாந்தாவின் தந்தை, அவரது தாயை பிரிந்து சென்றைதை தொடர்ந்து சிறுமியாக இருக்கும் கோபிசாந்தாவுடன், காரைக்குடி பக்கம் கோட்டையூர் அருகில் உள்ள பள்ளத்தூரில் குடியேறினார்.
அங்கே பலகாரக் கடை போட்டு தனது மகளை வளர்த்து வந்தார். ஆறாவதுடன் படிப்பு நின்று போக அங்கே உள்ள வீடுகளில் சிறுமி கோபிசாந்தா வேலை செய்தார். அங்கே இவர் ஆடிப்பாடி நடனம் ஆடியது எல்லோருக்கும் பிடித்து போக இவரது நடிப்பு திறமையால் உள்ளூர் நாடகக்குழுவில் மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்தது. இவரது நடிப்பை கண்டு வியந்து போன எஸ்.எஸ்.ஆர், தன் நாடகக் குழுவில் சேர்த்துக் கொண்டார். கவியரசர் கண்ணதாசன், தான் தயாரித்த படத்திலேயே கோபிசாந்தாவை அறிமுகம் செய்து வைத்தார்.
அதன் பிறகு சென்னை வந்த கோபிசாந்தா, மனோரமா என சினிமாவிற்காக பெயர் மாற்றிக் கொண்டார். ஆரம்ப காலங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த மனோரமா, பின்னர் காமெடி வேடங்களில் நடித்து தனக்கென தனியிடம் பிடித்தார். அவரது நடிப்பு அன்றிருந்த முன்னணி நடிகர்களையே ஆட்டம் காண வைத்தது என்றால் மிகையல்ல.
அது மட்டுமின்றி ஐந்து முதல்வர்கள் உடன் நடித்த ஒரே நடிகை என்ற சாதனையும் இவர் வசம் உண்டு. அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த பெருமைக்குரியவர். அது மட்டுமின்றி சுமார் 5000த்திற்கும் மேற்பட்ட நாடகங்களிலும், 1500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலும் நடித்து உலகப் புகழ்பெற்ற கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
எந்த நகைச்சுவை நடிகர் உடன் நடித்தாலும் ஜோடி பொருத்தம் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஜில் ஜில் ரமாமணியாக சிவாஜியுடன் நடிப்பில் போட்டி போட்டவர். 90களில் மனோரமா இல்லாத படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அம்மாவாக, அத்தையாக, அக்காவாக, பாட்டியாக என இவர் நடிக்கும் அத்தனை வேடங்களிலும் தேர்ந்த நடிப்பை வழங்கியிருப்பார்.