சென்னை:தமிழ் சினிமாவில் ஸ்டைலிஷ் இயக்குனராக வலம் வருபவர் கௌதம் மேனன். இவரை போலவே இவரது படங்களும் மிகவும் ஸ்டைலாக இருக்கும். அது காதல் படங்களாகட்டும், ஆக்ஷன் படங்களாகட்டும். அவர் கடைசியாக சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கியிருந்தார். தற்போது கௌதம் மேனன் கடன் பிரச்னையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இயக்கத்தில் இருந்து நடிக்க வந்துவிட்டார் பலர் கூறுகின்றனர்.
சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் கௌதம் மேனன் நடித்திருக்கிறார். ஏன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் முதன்முறையாக கூட்டணி அமைத்த படம் 'துருவ நட்சத்திரம்' (Dhruva Natchathiram). கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு நாடுகளிலும் நடத்தப்பட்டது.
இப்படத்தில் சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ஐஸ்வர்யா ராஜேஸ், திவ்யதர்ஷினி என பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் சூர்யா. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் நடிக்கவில்லை. அதன் பிறகு தான் விக்ரமை வைத்து கௌதம் மேனன் இயக்கினார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் டீசர், அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்திருந்தது. ஆனால் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மட்டும் எஞ்சியிருந்த சமயத்தில், பொருளாதாரப் பிரச்னை காரணமாக இறுதிகட்ட பணிகள் தள்ளிப் போய் கொண்டே இருந்தது.