தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / entertainment

2022ஆம் ஆண்டு வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை! - கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் பேப்பர் ராக்கெட்

கரோனாவிற்குப் பின் மாபெரும் எழுச்சி கண்ட ஓடிடி திரைத்தளத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த வரவேற்பைப் பெற்ற வெப் சீரிஸ் படங்கள் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Etv Bharat2022 ஆம் ஆண்டு வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை!
Etv Bharat2022 ஆம் ஆண்டு வரவேற்பை பெற்ற வெப் சீரிஸ் படங்கள் ஒரு பார்வை!

By

Published : Dec 19, 2022, 10:33 PM IST

தமிழ் சினிமா தொடங்கிய காலம் முதல் இன்று வரை புதுப்படங்கள் திரையரங்குகளில் தான் திரைப்படங்கள் வெளியாகி வந்தன. ஆனால், தொலைக்காட்சி வந்தபிறகு ஒரு சில படங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் திரையிடப்பட்டன. ஆனால், அந்த படங்கள் எல்லாம் திரையரங்குகளில் வெளியிட முடியாத காரணத்தால் தொலைக்காட்சியில் வெளியாகின. கரோனா நோய்த்தொற்று காலத்தில் பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே முடங்கியிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்தவர்களுக்கு பொழுதுபோக்கு ஏதுமில்லாமல் இருந்தபோது ஓடிடி என்னும் புதுவரவு அவர்களுக்கு வரப்பிரசாதமாக இருந்தது. தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி உலகப் படங்களும் உள்ளூர் தமிழில் பேசத் தொடங்கின. மாற்று மொழிப் படங்களையும் பார்த்து ரசிக்கும் வசதியை இந்த ஓடிடி தளங்கள் ரசிகர்களுக்கு அளித்தன. பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்களில் உள்ள சாமானியன் கைகளில் தவழும் செல்போன் மூலம் படங்களையும் இணையத்தொடர்களையும் பார்த்து ரசித்தான். கொரியன் படங்களும் கொஞ்சும் தமிழ் பேசின. ஓடிடி அசுர வளர்ச்சி அடைந்தது.

கரோனா காலகட்டத்தில் ஓடிடியின் எழுச்சி:கரோனா காரணமாக திரையரங்குகளில் வெளியிட முடியாத திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகின. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனது சூரரைப்போற்று படத்தை ஓடிடியில் வெளியிட்டார். திரையரங்கு உரிமையாளர்கள் இதற்கு எதிராக கொந்தளித்தனர். ஆனால், படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதனை தொடர்ந்து ஏனைய நடிகர்களும் தங்களது படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட்டார்கள். அவற்றில் சில வெற்றிபெற்றன. ஓடிடிக்கு இருக்கும் வரவெற்பைத் தொடர்ந்து ஓடிடிக்கு என தொடர்கள், படங்கள் எடுக்கும் போக்கு அதிகரித்தது. பல முன்னணி நடிகர்களும் ஓடிடியில் நடிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கினர்.

கரோனா தாக்கத்திற்குப் பிறகு இந்த ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மட்டுமின்றி ஓடிடி தளங்களுக்கும் வெற்றிகரமான ஆண்டாக அமைந்துள்ளது. ஒவ்வொரு ஓடிடி தளங்களும் பல்வேறு வகையான இணையத் தொடர்களை தயாரித்து வழங்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தின. அவற்றில் ரசிகர்களை ரசிக்க வைத்த ஓடிடி தொடர்கள் குறித்து இக்கட்டுரையில் பார்க்கலாம்.

1.விலங்கு:பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஓடிடி தொடர் விலங்கு. விமல், இனியா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்து ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த தொடர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது. சாதாரண போலீஸ் விசாரணையில் தொடங்கிய இதன் கதை ஒவ்வொரு எபிசோடிலும் விறுவிறுப்பை கூட்டியது.

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் விலங்கு

இதில் நடித்த கிச்சா என்ற‌ கதாபாத்திரம் மிரட்டியிருந்தார். இவர் சொல்லும் கிச்சானாலே இளிச்சவாயன் தானே என்ற ஒற்றை வசனம் மீம் டெம்ப்ளேட் ஆனது. பரபரப்பு குறையாமல் இக்கதையைக் கொண்டு சென்ற இயக்குநர் ரசிகர்களை பரவசப்படுத்தினார். அற்புதமான திரைக்கதை மற்றும் மேக்கிங்கிற்காகவே இந்த விலங்கு தொடர் பார்வையாளர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

ஒரு கொலை அதற்கான போலீஸ் விசாரணை எனத்தொடங்கி யார் கொலை செய்தது என்ற உண்மை தெரியவரும் இடமும் கொலையாளியின் சுயரூபம் தெரிய வரும் இடங்களும் ஒரு அருமையான த்ரில்லர் படம் பார்த்த உணர்வைப் பார்வையாளர்களுக்கு கொடுத்தது. அதுவும் போலீசாரை அழைத்துக்கொண்டு கிச்சா நடந்துவரும் காட்சி மிரட்டல். வருடத்தின் தொடக்கத்திலேயே ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார், இந்த கிச்சா.

2. சுழல்:இயக்குநர்கள் காயத்ரி- புஷ்கர் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண் இயக்கத்தில் அமேசான் பிரைமில் வெளியான இணையத்தொடர் சுழல். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஷ்ரேயா ரெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதுவும் ஒரு க்ரைம் த்ரில்லர் தொடர்தான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என 30 மொழிகளில் இந்த தொடர் வெளியானது.

காயத்ரி - புஷ்கரின் மாயாஜால திரைக்கதை மிகப்பெரிய பலமாக இருந்தது. வெகுவாரியான ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. காணாமல் போன இளம் காதல் ஜோடியைத் தேடும் காவல்துறையினருக்கு கிடைக்கும் திடுக்கிடும் உண்மைகள் தான் சுழல் தொடர். கதிர், ஸ்ரேயா ரெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோரின் நடிப்பும் ஒவ்வொரு எபிசோடின் முடிவில் ஏற்படும் திடுக்கிடும் திருப்பங்களும் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவத்தைக் கொடுத்தன.

ஒரு அருமையான சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்திற்கு அல்லது இணையத் தொடருக்கு முக்கியமான ஒன்று யார் செய்தார் என்பதை கடைசிவரை ஆடியன்ஸ் கண்டுபிடிக்க முடியாமல் குழப்பிவிடுவதே. அதனை சுழல் கச்சிதமாக செய்தது. இறுதியில் உண்மை தெரியும் போது நமக்கே சற்று அதிர்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அவலத்தை சஸ்பென்ஸ் கலந்து பரிமாறிய சுழல் படக்குழுவுக்கு பாராட்டுகள்.

3.பேப்பர் ராக்கெட்:கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியான தொடர் பேப்பர் ராக்கெட். இந்த தொடரில் காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கவுரி கிஷன், சின்னி ஜெயந்த் கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெப் சீரிஸ் என்றாலே மிகவும் டார்க் ஆகவும், அடிதடி வன்முறை கலந்தும், த்ரில்லர் அல்லது ஹாரர் பாணியிலும் வெளியாகி வரும் நிலையில், இவற்றுக்கு மத்தியில் ஒரு ஃபீல் குட் வெப்சீரிஸை இயக்கியிருந்தார், கிருத்திகா உதயநிதி.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜீ5 தளத்தில் வெளியான தொடர் பேப்பர் ராக்கெட்

ஒவ்வொரு எபிசோடையும் கலகலப்பாக கொடுத்திருந்தார். உலகில் பிறந்த அனைவரும் ஒருநாள் மரணிப்போம். பிறப்பை போல இறப்பையும் சந்தோஷமாக எதிர்கொள்ள வேண்டும் என்ற கருத்தை சொல்லி நம் எல்லோரையும் கலங்க வைத்தார். அடிதடி தொடர்களுக்கு மத்தியில் சற்று இளைப்பாறக் கூடிய படமாக பேப்பர் ராக்கெட் இருந்தது.

காளிதாஸ் ஜெயராம் - தன்யா ரவிச்சந்திரன்

4. தமிழ் ராக்கர்ஸ்:அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்து வெளியான தொடர் தமிழ் ராக்கர்ஸ். தமிழ் சினிமா தயாரிப்பு உலகில் மிகப் பாரம்பரிய மிக்க தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் புரொடக்சன்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்த வெப் தொடர் இதுவாகும்.

தமிழ் ராக்கர்ஸ் சோனி லிவ்-ல் வெளியானது

தமிழ் சினிமாவை தமிழ் ராக்கர்ஸ் என்ற அரக்கன் எப்படி ஆட்டிப்படைத்தான் என்பதை சொல்லியிருந்தார், அறிவழகன். ஆனால் சொல்ல வந்ததை சற்று தொய்வுடன் சொல்லியிருந்தார். ஆனாலும், முக்கியமான விஷயத்தை பேசிய விதத்தில் கவனம் பெற்றது.

5. வதந்தி:வருட கடைசியில் வந்த மற்றுமொரு தரமான வெப் சீரிஸ் வதந்தி. ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா முதல் முறையாக ஓடிடியில் நடித்து வெளியானது. சுழல் இணையத் தொடரை தயாரித்த புஷ்கர் - காயத்ரியின் அடுத்த படைப்பு. இதுவும் ஒரு மர்டர் மிஸ்ட்ரி கதைதான். வெலோனி என்ற இளம் பெண் கொலை செய்யப்படுகிறார். யார் கொலை செய்தார்கள் என்பதை விசாரிக்கும் போலீசாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார். ஒரு நல்ல வெப் சீரிஸுக்கு மிக அருமையான திரைக்கதை முக்கியம் என்பதை இந்த தொடரும் உணர்த்தியது.

வெலோனியாக நடித்திருந்த சஞ்சனாவின் நடிப்பு பார்வையாளர்களை வசப்படுத்தியது. மேலும் லைலா, நாசர், விவேக் பிரசன்னா ஆகியோரின் அனுபவ நடிப்பும் இந்த வெப் தொடருக்கு பக்கபலமாக இருந்தன. விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் மேக்கிங் கூடுதல் பலமாக இருந்தன. யார் கொலையாளி என கடைசிவரை ஆடியன்ஸை குழப்பிய இயக்குநர் இறுதியில் கொலைக்கு சொன்ன காரணம் சற்று ஏற்றுக்கொள்வதாக இல்லை.

இருப்பினும் இந்த வருட கடைசியில் வந்த ஒரு நல்ல தரமான வெப் சீரிஸ் வதந்தி. இவை தவிர்த்து அனந்தம், பிங்கர் டிப் , பேட்டைக்காளி உள்ளிட்ட இணையத் தொடர்களும் இந்த ஆண்டு ரசிகர்கள் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

இதையும் படிங்க:ஆசியாவில் முதல் முயற்சி “பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள்

ABOUT THE AUTHOR

...view details