சென்னை: தமிழ் சினிமாவில் நாளை மறுநாள்(டிச.29) 11 தமிழ்த் திரைப்படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.
மதிமாறன்: ஜி.எஸ் சினிமா இன்டர்நேஷனல் சார்பில் லெனின் பாபு தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மந்திர வீரபாண்டியன் இயக்கத்தில் இவானா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் நடிப்பில் மாறுபட்ட த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'மதிமாறன்'. யாரையும் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
வட்டார வழக்கு:மதுரா டாக்கீஸ் மற்றும் ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் K.கந்தசாமி மற்றும் K.கணேசன் இணைந்து தயாரித்த படம் 'வட்டார வழக்கு'. இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கியுள்ள இப்படத்தில் 'டூ லெட்' சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி, வெங்கடேசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இது 1985ஆம் ஆண்டு நடப்பது போன்ற கதையைக் கொண்ட படம். உறவினர்களுக்குள் நடைபெறும் பிரச்னையை வைத்து உருவாகி உள்ளது. குறிப்பிட்ட வட்டாரத்தில் நடக்கும் வழக்கை இப்படம் பேசுவதால் படத்திற்கு 'வட்டார வழக்கு' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை சக்தி ஃப்லிம் பேக்டரி சார்பில் சக்தி வேலன் வெளியிடுகிறார்.
நந்தி வர்மன்:ஏகே ஃப்லிம் பேக்டரி தயாரிப்பில் சுரேஷ் ரவி, ஆஷா வெங்கடேஷ், போஸ் வெங்கட், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், நந்தி வர்மன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைந்த கோயில், அதில் வைக்கப்பட்டுள்ள விலையுயர்ந்த சிலைகள், நகைகளைக் கொள்ளையடிக்க நினைக்கும் கும்பலைப் பற்றிய படமாக இப்படம் உருவாகி உள்ளது.
சரக்கு:நடிகர் மன்சூர் அலிகான் இயக்கி நடித்துள்ள திரைப்படம் சரக்கு. குடியின் கொடுமையை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ரூட் நம்பர் 17:நேநி புரொடக்சன்ஸ் சார்பில் டாக்டர்.அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. இந்த படத்தை இயக்குநர் அபிலாஷ் ஜி தேவன் இயக்கியுள்ளார். படத்தில் கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.
இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானப் பணிப்பெண்ணாக பணியாற்றுபவர். இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முப்பது வருடங்களுக்கு முன்பு, ஆரம்பித்த ஒரு பாதை இப்போது மூடப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் வலுக்கட்டாயமாக நுழைந்தவர்கள் எல்லாம் அன்றிரவே மரணத்தைத் தழுவுகிறார்கள். இதன் பின்னணியில் நெஞ்சை உருக்கும் காரணம் ஒன்று இருக்கிறது. 1990 முதல் 2020 வரை மூன்று வித காலகட்டங்களில் நடக்கும் 30 வருட பழிவாங்கல் கதையாக இந்தப் படம் கொண்டுள்ளது.
மூன்றாம் மனிதன்:இயக்குநர் ராம்தேவ் இயக்கத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், மூன்றாம் மனிதன். ஒரு அழகான குடும்பத்துக்குள் மூன்றாம் மனிதன் நுழைந்தால் அந்த குடும்பம் என்ன ஆகும் என்பதைச் சொல்லும் படம்தான் மூன்றாம் மனிதன்.
மேலும், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜெய் விஜயம், பேய்க்கு கல்யாணம், மூத்த குடி, யாவரும் வல்லவரே ஆகிய திரைப்படங்களும் இந்த வாரம் வெளியாக உள்ளன.
இதையும் படிங்க:5 நாட்களில் ரூ.400 கோடி..! வசூலை வாரி குவிக்கும் சலார் திரைப்படம்