ஹைதராபாத்: நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். ரசிகர்களால் ‘milky beauty' என அழைக்கப்படும் நடிகை தமன்னா கடந்த 2005ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ’சந்த் சா ரோஷன் செகரா’என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
அதன் பிறகு ரவி கிருஷ்ணா நடித்த ’கேடி’ (2006) படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2007இல் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான கல்லூரி திரைப்படம், இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக, தனுஷ் உடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன், பரத்துடன் கண்டேன் காதலை ஆகிய படங்களில் நடித்தார். 'கண்டேன் காதலை’ திரைப்படம் இந்தியில் கரீனா கபூர் நடித்த ’ஜப் வி மெத்’ என்ற படத்தின் ரீமேக்காகும்.
கண்டேன் காதலை படத்தில் தமன்னாவின் துடிப்பான கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் ’அயன்’ திரைப்படத்தில் சூர்யா-தமன்னா ஜோடி தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் விரும்பப்பட்டது.
பின்னர் 2010இல் கார்த்தியுடன் இவர் நடித்த ’பையா’திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பின்னர் விஜய்யுடன் நடித்த ’சுறா’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதேநேரம் ஜெயம் ரவியுடன் ’தில்லாலங்கடி’, மீண்டும் கார்த்தியுடன் சிறுத்தை ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு முன்னேறினார்.
பின்னர் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடித்த ’100% லவ்’ மிகப்பெரும் வெற்றியடைந்தது. சினிமா ரசிகர்கள் மத்தியில், நன்றாக நடனம் ஆடக்கூடிய நடிகை தமன்னா என பெயர் பெற்றார். பின்னர் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண், மகேஷ் பாபு, ஜூனியர் என்டிஆர் ஆகியோருடன் பல ஹிட் படங்களில் நடித்தார். அதன் பின் அஜித்-இயக்குநர் சிவா காம்போவில் உருவான ’வீரம்’படத்தில் நடித்தார்.
இந்திய சினிமாவில் முக்கியமான படைப்பாக பார்க்கப்படும் ’பாகுபலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த‘தர்மதுரை’, கார்த்தியுடன்‘தோழா’ ஆகிய படங்களில் தமன்னா கதாபாத்திரம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. திரைப்படங்கள் மட்டுமின்றி தமன்னா நடித்த‘November Story' வெப் சீரியஸ் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான ’ஜெயிலர்’படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காவாலா பாடலின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் இரண்டாவது இன்னிங்ஸிற்கு தயாராகியுள்ளார். இந்த நிலையில், தமன்னா திரைத்துறைக்கு வந்து 18 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ’18 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளேன். தற்போது மனநிறைவுடனும், முதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும். தன் மீது ரசிகர்கள் அளவு கடந்த அன்பு வைத்துள்ளனர். அவர்களின் அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது’ என்று தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா சினிமாவில் 18 வருடங்கள் நிறைவு செய்ததற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:'ஜெயிலர்' வெற்றி கொண்டாட்டம்: ரஜினிக்கு BMW கார் பரிசளித்த கலாநிதி மாறன்!