சென்னை:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர், விஜய். இவர் தனது நடிப்பு, ஆக்சன், டயலாக் டெலிவரி, நடனம் மூலம் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டு உள்ளார். இவரது படங்கள் வெளியாகும் நாளில், ரசிகர்கள் தியேட்டர்களை அலங்கரித்து திருவிழா போல் கொண்டாடுவர். சமீப காலமாக பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சக்கரவர்த்தியாக விஜய் இருந்து வருவதாக அறியப்படுகிறார்.
அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதன் முறையாக வசூலில் ரூ.50 கோடியைக் கடந்த முதல் திரைப்படம், விஜய் நடிப்பில் வெளியான கில்லி படமாகும். இதனையடுத்து முதல் முறையாக வசூலில் ரூ.100 கோடியைத் கடந்த முதல் திரைப்படம், துப்பாக்கி படமாகும். இந்த படம் வெளியாகி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் “துப்பாக்கி” திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் காஜர் அகர்வால், ஜெயராம், பிரசாந்த் நாயர், சஞ்சனா சாரதி, விடியூட் ஜாம்வால், தீப்தி நம்பியார், மனோபாலா, சத்யன், அனுபாமா குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இந்த படத்தை வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படம் விஜய்யின் திரைப் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படமாகும் என ரசிகர்கள் பலரும் கருதுகின்றனர். இந்த படத்தில் விஜய்யின் நடிப்பு ரசிகர்கள், பொதுமக்கள் என அனைவரது பாராட்டையும் பெற்றது.