மும்பை:பாலிவுட் நடிகை கஜோல், இந்தியில் ஷாருக்கான் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடித்த 'தில்வாலே துல்ஹனியா லே ஜெயேங்கே' ஆயிரம் வாரங்கள் ஓடி பெரும் வரவேற்பை பெற்றது. இவர் 'மின்சாரக் கனவு' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த ஒரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் தனக்கென ரசிகர் பட்டாளத்தையே அவர் உருவாக்கிவிட்டார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் 'வேலையில்லாப் பட்டதாரி-2' திரைப்படத்தில் கஜோல் நடித்தார்.
அண்மையில் கஜோல் நடித்திருந்த இந்தி வெப் சீரிஸ் 'லஸ்ட் ஸ்டோரிஸ்-2' நெட்ஸ்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, இவர் நடித்துள்ள 'தி ட்ரையல்' வெப் சீரிஸ் வரும் 14ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. சுபர்ன் வர்மா இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸில் கஜோல் வழக்கறிஞராக நடித்துள்ளார்.
இந்த வெப் சீரிஸ் தொடர்பான புரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை கஜோல், "இந்தியா போன்ற ஒரு நாட்டில் மாற்றம் மெதுவாக உள்ளது. உண்மையில் மிக மிக மெதுவாகவே உள்ளது. ஏனென்றால், நாம் நமது பாரம்பரியங்களில் பழமையான சிந்தனைகளில் மூழ்கி இருக்கிறோம். இதற்கும் நமது கல்விக்கும் தொடர்பு உள்ளது. மேலும், எந்தவித கல்வி அறிவும் இல்லாத அரசியல் தலைவர்கள் நம்மிடம் உள்ளனர். அவர்களால் நாம் ஆளப்படுகிறோம். அவர்களில் பலருக்கு சரியான கண்ணோட்டம் இல்லை, கல்விதான் இந்த கண்ணோட்டத்தை தரும்" என்று தெரிவித்தார்.