தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

கடந்த 4 ஆண்டுகளாக மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? ப.சிதம்பரம் கேள்வி - கேள்வி

மதுரை: கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ப.சிதம்பரம்

By

Published : Apr 6, 2019, 1:56 PM IST

மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி குறித்த தேர்தல் அறிக்கையின் தமிழாக்கம் மதுரையில் இன்று வெளியிடப்பட்டது. இதில், அக்கட்சியின் தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளருமான சஞ்சய் தத் மற்றும் உள்ளூர் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

ப.சிதம்பரம்

இதனிடையே தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம் பேசுகையில், "காங்கிரஸ் கட்சியால் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கை இந்தியா முழுவதும் மிக பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்திய மக்களின் பல்வேறு எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இதனை தயாரித்து அளித்துள்ளோம்.

ஆண்டுக்கு பல கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்று கூறி கடந்த முறை ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய அரசு பணியிடங்கள் நான்கு லட்சத்தை இதுவரை நிரப்பவில்லை அதே போன்று மாநிலங்கள் முழுவதும் ஏறக்குறைய 20 லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கும் பாஜக அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

கடந்த 2004ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரை இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் ஆட்சியின்போது எந்தவித பாதுகாப்பு குறைபாடுகளும் இருந்ததில்லை. அதே போன்று பாகிஸ்தானோடு முரண்பட்டு போர்ச்சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகவில்லை. இந்திய நாட்டின் பாதுகாப்பில் காங்கிரஸ் எப்போதும் அக்கறையோடும், நேர்மையோடும் செயல்பட்டு வருகிறது.

இந்தியா ஒரே நாடு. இங்கு பல்வேறு மாநில மக்கள் இருக்கிறார்கள். அதனால் ஒரு மாநிலத்தில் உள்ள மக்கள் பிற மாநிலத்தில் சென்று வேலை பார்ப்பது இயல்பு. தமிழகத்தைப் பொருத்தவரை வடமாநிலத்தவர் நிறைய பேர் வேலை செய்து வருகிறார்கள் என்பதில் காங்கிரஸ் கட்சி பெரிய விஷயமாக பார்க்கவில்லை எனக் கூறினார்.

இதனிடையே ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கவில்லை என மதுரையில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரையின் போது முதலமைச்சர் எடப்பாடி கூறியது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த சிதம்பரம், கடந்த 2011ஆம் ஆண்டுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி என்றால் யாருக்குமே தெரியாது. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தமிழகத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை அவரது அலுவலகத்தில் உள்ள கோப்புகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம் எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details