திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கியக் கட்சிகளான அதிமுக, திமுக, அமமுக, நாம் தமிழர், மநீம போன்ற கட்சிகள் இங்கே களமிறங்கியுள்ளன. திருப்பரங்குன்றம் தொகுதியின் வாக்காளர்களில் ஆண்கள் 1,49,421 பேர், பெண்கள் 1,52,111 பேர், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 3,01,557 பேர் உள்ளனர்.தமிழகத்திலேயே 18-லிருந்து 19 வயதுக்குள் உள்ள அதிக இள வயது வாக்காளர்களைக் (7,696 பேர்) கொண்ட தொகுதியாகும். இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 2.6 சதவிகிதம். அதே வயதுடைய தமிழகத்தின் மொத்த வாக்காளர்களில் (8,98,979 பேர்) இது 0.9 சதவிகிதமாகும்.
இந்தத் தொகுதி வாக்காளர்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் என்னவாக உள்ளது என்பது குறித்து ஈடிவி பாரத் ஊடகம் களத்திலிறங்கி ஆய்வு மேற்கொண்டது. அதன் விளைவாக பொதுமக்கள் பலர் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர். மட்டுமன்றி, இந்தத் தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ள வேட்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தங்களின் ஆலோசனையாகவும் தெரிவித்தனர்.
வடிவேல்கரையைச் சேர்ந்த பால்காரர் பாலு கூறுகையில், எங்கள் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கு ஏற்றவாறு நல்ல மைதானம் கிடையாது. நிறைய புறம்போக்கு நிலங்கள் இருந்தும் அவர்களுக்குத் தேவையானதை ஆட்சியாளர்கள் செய்ய மறுக்கிறார்கள். மேலும் குடிநீருக்காக அமைக்கப்பட்ட பைப்புகள் அனைத்தும் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன' என்று ஆதங்கப்படுகிறார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த ரத்தினகிரி என்ற ஓய்வு பெற்ற நீதிமன்ற பணியாளர் கூறுகையில், நிலையூர் கால்வாயிலிருந்து வடிவேல் கரை கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வடிகாலாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது. வடிவேல்கரை கால்வாயை பிரதானக் கால்வாயாக மாற்றி முப்போகம் இந்த மண்ணில் விளைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுகுறித்து பலமுறை மனு அளித்தும் ஒருபோதும் நடவடிக்கையில்லை. வடிவேல்கரை கால்வாய்க்குப் பிறகு உருவாக்கப்பட்ட செல்லம்பட்டி கால்வாய், திருமங்கலம் கால்வாய் ஆகியவற்றை பிரதான கால்வாயாக மாற்றியுள்ளனர்' என்றார்.
விளாச்சேரி கொட்டாரம் மந்தை பகுதியைச் சேர்ந்த தவமணி என்பவர் கூறுகையில், 'ஏறக்குறைய 150 குடும்பங்கள் உள்ள இடத்திற்குப் பட்டா கேட்டு பலமுறை போராட்டம் நடத்தியுள்ளோம். தற்போது பட்டாவுக்கு அரசாங்கம் ஒப்புதலளித்தும் இன்னமும் எங்கள் கைக்கு கிடைக்கவில்லை. முறையாக வரி கட்டிவருகிறோம். எங்களது வீடுகளுக்கு கதவு எண் கொடுக்கப்பட்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த முறை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால் வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்படைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை' என்றார்.