தேனி மக்களவைத் தொகுதியில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இரு வாக்குச்சாவடிகளில் மே 19ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடத்திட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட அழகிரிசாமி (இவரை சுயேட்சை வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது), சுயேட்சை வேட்பாளர்கள் பாலகிருஷ்ணன், வைகை பாண்டியன், கலுசிவலிங்கம், கண்டுக்காரன் உள்ளிட்ட ஐந்து வேட்பாளர்கள் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் மறு வாக்குப்பதிவு நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர் பல்லவி பல்தேவிடம் இன்று மனு அளித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் மறு வாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் கோரிக்கை
தேனி: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் மறு வாக்குப்பதிவு நடத்த மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட ஐந்து சுயேச்சை வேட்பாளர்கள் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் மனு அளித்துள்ளனர்.
பின்னர் இது குறித்துசெய்தியாளர்களிடம் பேசிய சுயேச்சை வேட்பாளர்கள், "வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் பிடிபட்டதால் வேலூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆண்டிபட்டியில் அதிமுக, திமுக, அமமுக ஆகிய கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்தனர். இதன் உச்சமாக ஆண்டிபட்டியில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யவிருந்த 1.48 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது. எனவே, ஆண்டிப்பட்டி தொகுதி முழுவதும் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் இது சம்பந்தமாக வழக்குத் தொடர முடிவு செய்துள்ளோம்" என்றார்.