திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் வறட்சி நிவாரணம் மற்றும் நீர் மேலாண்மை திட்டத்தை நிறைவேற்ற நான்கு நீர் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் தருமபுரி மாவட்டத்தில் மரம், செடி, கொடிகள் எல்லாம் காய்ந்து கருகிப் போய் விட்டதாகவும், விவசாயம் முற்றிலும் அழிந்து மாவட்டமே பாலைவனமாக காட்சி அளிப்பதாகவும் முல்லைவேந்தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், விவசாயிகள் வறுமையில் சிக்கி வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதற்கு அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக படை எடுத்துச் செல்வதாகவும், இந்த அவல நிலையைப் போக்குவதற்கு தமிழ்நாடு அரசும், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் போர்கால அடிப்படையில் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த முல்லைவேந்தன் திமுகவிலிருந்து விலகி சிறிது காலம் தேமுதிகவில் இருந்தார். பிறகு, மீண்டும் திமுகவில் இணைந்து கட்சியில் எந்த பொறுப்பும் அளிக்காததால் தேர்தல் பரப்புரையில் ஈடுபடாமல் இருந்த இவர், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுதிய கடிதம் தருமபுரி அரசியல் வட்டாரத்தில் மிகப் பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.