கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு இந்தத் தேர்தல் எளிய தேர்தலாகவே இருக்க வேண்டும். காரணம், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அன்புமணி நான்கு லட்சத்து 68 ஆயிரத்து194 வாக்குகளும், தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக மூன்று லட்சத்து,91 ஆயிரத்து 048 வாக்குகளும் பெற்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இவ்விரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் 8.6 லட்சமாகவும், எதிரணியான திமுக காங்கிரஸ் கடந்த தேர்தலில் மொத்தமாக பெற்ற வாக்குகள் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக தருமபுரியில் உள்ள ஆறு சட்டபேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 2.85 லட்சம் வாக்குகள் பெற்றது. அதிமுகவோ சுமார் நான்கு லட்சம் வாக்குகள் பெற்றது.
இதுபோன்ற எண்ணிக்கை கணக்குகளின் சாதகமும், பாமகவின் கோட்டையாக தருமபுரி கருதப்பட்டாலும், தேர்தலை சந்திக்கும் அன்புமணிக்கு இம்முறை பெரும் சவால் காத்திருக்கிறது. காரணம், அமமுக பலம் வாய்ந்த வேட்பாளரான பழனியப்பனை நிறுத்தியுள்ளது இதனால் வாக்கு பிரிவது, உள்ளூர் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு சாதகமாகவே அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. அத்துடன் அன்புமணியின் கடந்த ஐந்தாண்டுகால செயல்பாடு குறித்தும் தொகுதியில் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் உறுதியளித்தபடி விவசாயிகளுக்கான நீர் பிரச்னையும் தீர்க்கவில்லை, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளும் எதுவும் தொடங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்வரை அதிமுக மற்றும் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடிய அன்புமணி தற்போது அவர்களின் கூட்டணியிலேயே சிக்கிக்கொண்டுள்ளார்.