மக்களவைத் தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி இரட்டை இலை சின்னத்தில் வெற்றிபெற்ற கள்ளக்குறிச்சி பிரபு, விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தின சபாபதி ஆகியோர் மீது ‘கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது?’ என விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்தத் தகவல்கள் செய்தி ஊடகங்களை ஆட்கொண்டிருந்த பரபரப்பான நேரத்தில், அடுத்த உடனுக்குடன் செய்தியாக சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்காக பேரவைச் செயலர் கே.சீனிவாசனிடம் எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
டிடிவி தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாகக் கூறி தகுதிநீக்க அஸ்திரத்தை அதிமுக கையில் எடுத்தால், திமுக ஏன் எதிர்வினையாற்றுகிறது என குழப்பங்கள் ஏற்பட்டன. அதைத் தீர்க்க அமமுக வட்டாரத்தில் பேசியபோது, தேர்தல் முடிவுகள் ஒருவேலை சாதகமாக வராத பட்சத்தில், உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைத்து ஆட்சியை நீட்டிக்கவே தகுதிநீக்க அஸ்திரத்தை அதிமுக கையில் எடுத்தது. அதற்கு செக் வைக்கும் விதமாகவே சபாநாயகர் மீது திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பதாக விவரிக்கின்றனர்.
அதேபோல், அவை பலம் சரிபாதி உறுப்பினர்களின் ஆதரவு திமுகவின் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு கிடைத்தால்தான் தீர்மானம் வெற்றி அடையும். ஆனால், திமுகவுக்கு 97 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதால், தீர்மானம் தோல்வியில் தான் முடியும் என்கிறார் வழக்கறிஞர் தமிழ்மணி.