வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை ஆதரித்து அவரது தந்தையும், திமுக பொருளாளருமான துரைமுருகன் நேற்று இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டார்.
வேலூர் மண்டித் தெருவில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய துரைமுருகன், தன் மகன் கதிர் ஆனந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தாங்கள் வேட்டையாடப்படுவதாகக் குற்றம்சாட்டினார்.
"என் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து பேசிய அவர், என் வீட்டுப் பெண்களை காவல்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். அப்படியானால் நாங்கள் என்ன திருடர்கள் கூட்டமா? திமுக பொருளாளராக ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் என்னை ஒரு கேடி பட்டியலில் வைத்து காவல் துறையினர் வளைத்துப் பார்ப்பது ஏன்? " என ஆவேசமாகக் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, "எங்கள் வீட்டில் மட்டும்தான் கத்தை கத்தையாகப் பணம் இருக்கிறதா? வருமான வரித்துறை அலுவலர்கள் என் வீட்டிற்கு வந்து பீரோவை உடைத்து அரிசி மூட்டைகளைத் தள்ளி இரண்டு முறை சோதனை செய்தார்கள். அவர்கள் எடுத்தது என்ன ? வெறும் 10 லட்சம் மட்டும்தானே, 5 பேர் நாங்கள் வரி கட்டுகிறோம் எங்களுக்கு ஆளுக்கு இரண்டு லட்சம் கூட வைத்துக் கொள்ளக் கூடாதா ? ஒரு எம்எல்ஏ கல்யாண விஷேஷத்துற்கு சென்றால் பத்து பைசா கூட இல்லாமல் போக முடியுமா?" என அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினார்.