மதுரை கீழக்கரையில் அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக வேட்பாளர் ராஜ்சத்யனுக்கு வாக்கு அளிக்க வேண்டும் என உங்களிடம் சத்தியம் வாங்க வந்துள்ளேன். ரயிலை விட வேகமாக தமிழ்நாடு வேகமாக முன்னேற வேண்டும் என்றால் வாக்காளர்களாகிய நீங்கள் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுகவை யார் நினைத்தாலும் பிரிக்கவும் முடியாது, அசைக்கவும் முடியாது.
உங்களின் பிள்ளைகளின் எதிர்காலமும், நாட்டின் எதிர்காலமும் நன்றாக இருக்க வேண்டும் என்றால், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி என்பது நண்பர்களை போல் இருக்க வேண்டும். மேலும் தேர்தல் அறிக்கை சத்தியத்திற்கு கட்டுப்பட்டது. அதை நம்பியே மக்கள் வாக்களிக்கிறார்கள்.
ஐந்து வருடத்தில் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால், ஆட்சியாளர்களை மக்கள் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதைத் தொடர்ந்து அமைச்சர் செல்லூர் ராஜு பேசுகையில், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பதை தெரிந்த திமுக தலைவர் ஸ்டாலின் தனிநபரை குறிவைத்து விமர்சனம் செய்துவருகிறார். இந்தத் தேர்தலோடு திமுக காணாமல் போய்விடும். ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக கூட இருக்க முடியாது என தெரிவித்தார்.