காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ள புதிய மக்களவை உறுப்பினர்களை சோனியா, ராகுல் ஆகியோர் சந்தித்து மக்களவையில் செயல்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
அரசியலமைப்பை காப்பாற்ற சிங்கம்போல் செயல்படுவோம் - சீறும் ராகுல் - காங்கிரஸ்
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து துணிச்சலான சிங்கங்கள்போல் செயல்பட்டு அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஆலோசனையில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் வசந்த குமார், திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு ராகுல் காந்தி, "மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 52 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால் நாங்கள் பெருமை மிகுந்த துணிச்சலான சிங்கங்கள் போல் செயல்பட்டு அரசியலமைப்பை காப்பாற்றி மக்களவையில் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்படுவோம். பாஜகவுக்கு இந்த மக்களவை கடும் சவாலாக இருக்கப்போகிறது" என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.