தேவேந்திர குல வேளாளர் அரசாணை - சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்கு விழுக்காட்டில் கை கொடுக்குமா? - டாக்டர் ராமதாஸ்
சென்னை: தமிழ்நாட்டில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஏழு உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து, 'தேவேந்திர குல வேளாளர்' சட்ட திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்த நிலையில், ஆளும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்கு விழுக்காட்டை அதிகரிக்க கை கொடுக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் மற்ற இயக்கங்களுடன் இணைந்து தங்களது சமூக அடையாளத்துக்கு 'தலித்' என்று வார்த்தையை தவிர்த்து, பட்டியல் இனத்தில் உள்ள உட்பிரிவுகளான தேவேந்திர குலத்தான், கடையன், காலாடி, குடும்பன், பள்ளன், பன்னாடி, வாதிரியான் ஆகிய ஏழு உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, தேவேந்திர குல வேளாளர் என்று பெயர் சூட்ட வேண்டும் என்று பல ஆண்டுகளாக மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
மேலும், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, இதுபற்றி பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறிய நிலையில், மத்திய அரசு இதற்கான அரசாணையை ஒப்புதல் செய்து, மேலவையில் அடுத்த கூட்டத்தொடரில் விவாதித்து ஆணை பிறப்பிக்க இருக்கிறது. தமிழகத்தில் சுமார் 21 விழுக்காடு மக்கள், இந்த தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் உள்ளனர்.
மத்தியில் உள்ள பாஜக அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், இந்த அரசாணையானது வரும் தேர்தலில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பொதுவாக, தேர்தல்கள் நெருங்கும்போதெல்லாம், ஆளும் கட்சிகளுக்கு சவாலாக, வெவ்வேறு கட்சிகள், அரசுப் பணியாளர்கள், விவசாயிகள் மற்றும் குறிப்பிட்ட சமுதாயத்தினர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அழுத்தம் கொடுப்பார்கள். இதனால், அரசும் அதிக வாக்கு வங்கிகளைப் பெற, கோரிக்கைகளைப் பரிசீலிக்கும்.
தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மூத்த நிர்வாகியான, ஜஸ்டின் திரவியம் கூறும்போது, "இந்த நீண்ட வருட கோரிக்கையை கடந்த பல ஆண்டுகளாக, திமுக மற்றும் அதிமுக அரசுகளை நிறைவேற்ற கேட்டுக்கொண்டோம். எனினும், எந்த அரசும் செவிசாய்க்கவில்லை. இந்த நிலையில், அதிமுக, மத்தியில் உள்ள பாஜக கைகோர்த்து இந்த அரசாணையை வெளியிட்டது, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. வாக்கு வங்கிகளைப் பொறுத்தவரை, எங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக, பாஜகவை ஆதரிப்போம்'' என்றார்.
அதிமுக செய்தித்தொடர்பாளர் சிவசங்கரி நம்மிடம் கூறுகையில், "தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிட்டதில், எவ்வித அரசியல் உள்நோக்கமும் இல்லை. அதிமுக அரசானது, நீண்ட நாள் கோரிக்கைகளை பரிசீலித்து, அரசாணை வெளியிட்டு வருகிறது. தேவேந்திர குல வேளாளர் அரசாணை மட்டுமல்ல, மற்ற அறிவிப்பான 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்', 7.5 விழுக்காடு மாணவர்களுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்டதெல்லாம் அரசானது, மக்கள், மாணவர்கள் நலன் கருதி எடுத்த முடிவு" என்ற அவர், இந்த அரசாணையும் குறிப்பிட்ட சமூகம் சார்ந்த மக்கள் நலன் கருதி எடுத்த முடிவு என்றார்.
அரசியல் ஆய்வாளர், பி ராமஜெயம், "இது பாஜகவின் தலித் அரசியலாக பார்க்கப்பட்டாலும், தேர்தல்களின் வாக்கு வங்கிகளில் பெரிதும் மாற்றத்தை ஏற்படுத்தாது. பொதுவாகவே, தலித்துகளின் கோரிக்கைகள், ஆளும் கட்சிகளுக்கு எப்பொழுதும் ஒரு சவாலாகவே இருக்கும். அதனாலேயே, எல்லா அரசுகளும் கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சி எடுக்கும்." எனினும், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மத்திய பாஜக அரசு, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால், வாக்கு வங்கிகளை கண் வைத்து இந்த கோரிக்கையை நிறைவேற்றியிருக்கலாம், என்று கூறிய இவர், இட ஒதுக்கீடு பற்றிய மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தால், வாக்கு வங்கிகள் மாற வாய்ப்புகள் அதிகம் என்றார்.
இந்த நிலையில், தமிழ்நாடு வந்திருந்த பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பின், இந்த நீண்ட நாள் கோரிக்கையை பற்றி பேசுகையில், "தேவேந்திர குல வேளாளர் என்று அழைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.