சென்னை: பாஜக சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வேட்பாளரான குஷ்பு சுந்தர், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், திமுக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துக் களம் காண்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஆயிரம் விளக்குத் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்த அறிவிப்பு வெளியானதும், உடனடியாகத் தனது பரப்புரையைத் தொடங்கி தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். அத்தொகுதிக்குள்பட்ட பாக் சாலை பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த குஷ்பு சுந்தர் நம்மிடம் பேசினார்.
குட்டீஸ்களுடன் குஷ்பு செல்பி தன்னை எதிர்த்து திமுக சார்பில் பலமான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, போட்டி இருக்கும் போதுதான் முயற்சி அதிகமாக இருக்கும். மக்களுடைய எழுச்சியைப் பார்க்கும்போது எனக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
ஆயிரம் விளக்குத் தொகுதியில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன எனக் கேட்டபோது, தண்ணீர்ப் பிரச்சினை, பாதாளச் சாக்கடைப் பிரச்சினை, ஆங்காங்கே தெரு விளக்கு எரியாதது உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்றார். இதனைச் சரிசெய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளதாகக் கூறினார்.
எல்லோரும் போனை பாருங்க, அக்கா செல்ஃபி எடுக்கிறேன் இந்தத் தேர்தலில் எதனை முன்னிறுத்தி உங்கள் பரப்புரை யுக்தி இருக்கும் என்ற கேள்விக்கு, அதிமுக அரசின் சாதனைகள், அவர்கள் கொண்டுவந்த நலத்திட்டங்கள், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் உள்ளிட்டவை குறித்தும், பிரதமர் நரேந்திர மோடி ஆறு ஆண்டுகள் ஆட்சியில் கொண்டுவந்த நலத் திட்டங்கள் குறித்தும், அதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் பெற்றுள்ள பயன்கள் குறித்தும் மக்கள் மத்தியில் எடுத்துரைப்பேன் என்றார். தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பாஜக வரவேற்பைப் பெறுவதாகவும் குஷ்பு சுந்தர் கூறினார்.
நடிகை என்பதால் அவர் செல்லுமிடமெல்லாம் அவரைக் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றுடன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவும் ஓரளவுக்கு இருக்கிறது. அதேநேரத்தில், அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் எழிலன், சிறந்த சிந்தனைவாதி எனக் கூறப்பட்டாலும் அவருக்குப் போதிய ஊடக வெளிச்சம் கிடைக்கவில்லை எனக் கூறலாம்.
ஏழை, எளிய மக்கள் அதிகம் உள்ள தொகுதி இது. இஸ்லாமியர்களும், பட்டியலின மக்களும் கணிசமான அளவுக்கு இங்கு வசிக்கின்றனர். கடந்த முறை திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டப்பேரவை உறுப்பினர் கு.க. செல்வம் தற்போது பாஜக பக்கம் உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
இச்சூழலில் குஷ்பு சுந்தரின் பிரபலமும், பரப்புரையின்போது அவரைக் காணக்கூடும் மக்கள் கூட்டமும் அவருக்கான வாக்குகளாக மாறுமா என்பதே பிரதான கேள்வியாக முன்வைக்கப்படுகிறது.
ஆயிரம் விளக்குத் தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு சுந்தர்