கரூர்:கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மார்ச் 17ஆம் தேதி இரவு கடம்பங்குறிச்சி, நன்னியூர், செவ்வந்திபாளையம், சிந்தாயூர், துவரைப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி ஆற்றுப்படுகைகளிலிருந்து உள்ளூர் கட்டுமானத் தேவைகளுக்கு மாட்டு வண்டிகளில் மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை ஆண்டாண்டு காலமாக இருக்கிறது. இந்த அடிப்படைகூட நடிகராக உள்ள கமல்ஹாசனுக்கு தெரியவில்லை.
கரூர் மாவட்டத்தில் சுமார் 15,000 மாட்டுவண்டித் தொழிலாளர்கள் மணல் அள்ள முடியாததால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர். மாட்டு வண்டிகளில் மணல் அள்ளத் தடை செய்தால், அதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அதற்குத் தடை உள்ளது என மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். காரணம், இத்தொகுதியில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எம்.சாண்ட் தயாரிக்கும் குவாரி ஒன்றை நடத்தி வருகிறார். அது பாதிக்கப்படும் என்பதற்காகவே மணல் அள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.