ஈரோடு: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொண்டார்.
இதற்காக கோயம்புத்தூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்த அவர், டெக்ஸ்வேலி வளாகத்தில் இறங்கினார். பின்னர் காரில் பெருந்துறை வழியாக மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட சிவகிரி, மொடக்குறிச்சி, அறச்சலூர், லக்காபுரம் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
பின்னர் அங்கிருந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட திருநகர் காலனியில் நடந்த பரப்புரைப் பொதுக் கூட்டத்தில் வேட்பாளர்களுக்கு வாக்குகள் கேட்டு உரையாற்றினார்.
மக்கள் மத்தியில் பேசிய கமல்ஹாசன், “50 ஆண்டுகளில் என்ன நடந்து இருக்கிறது. சாதி ஒழிந்து விட்டதா? ஓட்டு வங்கிக்காக அதை பயன்படுத்தி வருகிறார்கள். ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்று கூறி ஆட்சிக்கு வந்தார்கள்; ஆனால், ஏழைகள் இல்லாத நிலையை உருவாக்கினார்களா?.
தாய் மொழியை காப்பாற்றி விட்டார்களா? நாங்கள் தாய் மொழியை மீட்க குரல் கொடுப்போம். என் உயிர் தமிழ். தமிழ் வாழ்க என்று கூறுவது எனது பிறப்புரிமை. தற்போது தமிழ் மொழி பேசக்கூட மறந்து விடுகிறார்கள். அதற்குக்காரணம் ஆரம்ப பள்ளிக்கூடம் சரியாக இல்லை. 39 தொகுதிகளில் மக்களவை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அந்த தொகுதிகளில் இதுவரை ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா? அண்ணாவின் தம்பிகள் இவர்கள் கிடையாது. இவர்கள் வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
எனது சொத்து மதிப்பு ரூ.176 கோடி ஆகும். இந்த வருமானம் உங்களிடம் இருந்து வந்தது. நான் சரியாக வரி கட்டுகிறேன். எதற்கு வரி கட்டினேன் என்றால், அந்தப் பணம் உங்களுக்கு வரும் என்றுதான். ஆனால், அந்தப் பணத்தை தரகுத் தொகையாக பலர் எடுத்துக்கொண்டு விட்டார்கள். ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் பெரிய அய்யாவுக்கு 40 விழுக்காடு, சிறிய அய்யாவுக்கு 30 விழுக்காடு என்று கையூட்டுக் கொடுக்க வேண்டியுள்ளது.
சிறு, குறு தொழில் முனைவோர்கள் கையூட்டுக் கொடுக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் லஞ்சம் கொடுக்க முடியாமல், முதலமைச்சருக்குக் கடிதம் எழுதிவிட்டு பொது இடத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலையை நிறுத்த வேண்டும்.
வேட்பாளர்களை அறிவிக்கும் கமல்ஹாசன் தென்கொரியா நாடு சதுர அடியை பொறுத்தவரையில் தமிழ்நாட்டை விட சிறியது. அங்கு 5 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அவர்களது வருமானம் ஜி.டி.பி. என்பது 1.6 டிரில்லியன் டாலராக உள்ளது. இது 15 லட்சம் கோடிக்கு மேலாகும். தமிழ்நாட்டின் வருமானத்தை 4 மடங்கு எங்களால் உயர்த்த முடியும். அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. இதேபோல் ஆளும் அரசு எனது விஸ்வரூபம் படம் வெளியாகியபோது தடை ஏற்படுத்தாமல் இருந்திருந்தால், எனது சொத்து மதிப்பு ரூ.176 கோடி அல்ல. ரூ.200 கோடியைத் தாண்டி இருக்கும்.
இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தை நாம் தான் முதலில் அறிவித்தோம். அதை இப்போது புதிதாக கண்டுபிடித்ததுபோல் மற்றவர்கள் ரூ.1,000, ரூ.1,500 என்று ஏலம் விடுகிறார்கள். நல்ல திட்டத்தை ஏற்றுக்கொள்வது சிறந்தது தான். நான் நேர்மையை நல்லது என்று கூறுகிறேன். அதையும் அவர்கள் ஏற்று கொள்வார்களா?” என்றார்.