தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / elections

இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை எல்லாம் இங்குப் பலிக்காது - ஸ்டாலின் - ஸ்டாலின் கோவை பரப்புரை

'இது திராவிட மண், மோடி மஸ்தான் வேலை இங்குப் பலிக்காது. இது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு நடத்தப்படும் தேர்தல்' எனக் கோயம்புத்தூரில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

dmk leader stalin election campaign in coimbatore
dmk leader stalin election campaign in coimbatore

By

Published : Mar 20, 2021, 9:31 AM IST

கோயம்புத்தூர்: ஈச்சனாரி அருகே திமுக தலைவர் ஸ்டாலின், கிணத்துக்கடவு, சூலூர், தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி தொகுதி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உள்ளாட்சியில் ஊழல் ஆட்சி செய்தவர் அமைச்சர் வேலுமணி எனவும், ஊழல் செய்வதைத் தொழிலாகக் கொண்டவர் அவர் எனவும் குற்றம் சுமத்தினார்.

பினாயில், சுண்ணாம்பு, எல்இடி பல்பு வாங்குவதில் ஊழல் செய்தவர் வேலுமணி, இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்துவதாக அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சொல்லியுள்ளது, ஊழல் நடந்துள்ளதை அரசே ஒப்புக் கொண்டுள்ளதைக் காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வேலுமணிக்கு ஆதரவாக உள்ள காவல் துறை அலுவலர்கள் பட்டியல் தனது கையில் உள்ளதாகவும், ஆட்சிக்கு வந்ததும் தவறு செய்யும் காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

பாஜகவிற்குப் பயந்து சிஏஏ சட்டம் அமல்படுத்த வாக்குகளை அளித்து ஆதரவளித்தது அதிமுக அரசு எனக் கூறிய ஸ்டாலின், பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம் பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து, காணொலி பதிவு செய்து மிரட்டி பணம் பறித்த குற்றவாளிகள் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் துரித விசாரணை நடத்தித் தண்டிக்கப்படுவர் என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையை நகலெடுத்து அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது என்றவர், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் அதிமுக நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.

கருணாநிதி, ஜெயலலிதா இருந்தவரை நீட் தமிழ்நாட்டிற்குள் நுழைய முடியவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரணம் நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

“இது திராவிட மண். யாரும் நெருங்க முடியாது. மோடி மஸ்தான் வேலை இங்குப் பலிக்காது. இது தமிழ்நாட்டின் சுயமரியாதைக்கு நடத்தப்படும் தேர்தல்” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து குனியமுத்தூர் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதிக்கு ஆதரவாக ஸ்டாலின் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.

ABOUT THE AUTHOR

...view details