கரூர்: கிருஷ்ணராயபுரம், குளித்தலை, கரூர் சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக நேரடியாக திமுகவை எதிர்த்து போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக, கரூர் சட்டபேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில், மாவட்ட செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார்.
மார்ச் 13ஆம் தேதி காலை திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, முத்தாலம்மன், பட்டாலம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார். அதே இடத்தில் தொடர்ந்து மதியம் அதிமுக வேட்பாளர் விஜயபாஸ்கரும் கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு பரப்புரையைத் தொடங்கினார். அப்போது அவருடன் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை உடனிருந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, “மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக ஆட்சி செய்கிறார். பெண்களுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. திமுகவில் குடும்ப அரசியல் மட்டும்தான் நடக்கிறது. ஸ்டாலின் தன்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு சீட்டு கொடுத்துள்ளார். இதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” எனத் தெவித்தார்.
அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் தம்பிதுரை பேட்டி தொடர்ந்து பேசிய அவர், “செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து சென்றவர். அவர் செயல்பாடு எப்படி இருக்கும் என்று எங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் நன்றாக தெரியும். அவர் அதிமுகவிற்கும் உண்மையாக இல்லை. தற்போது அவர் இருக்கக்கூடிய திமுகவிற்கும் உண்மையாக இல்லை. ஒரே கட்சிக்காக பாடுபட்ட நபர்களைத்தான் மக்கள் அடையாளம் கண்டு ஆதரவு தருவார்கள். அந்த ஆதரவு விஜயபாஸ்கருக்குதான்” எனக் கூறினார்.
தேமுதிக எங்கள் கூட்டணியிலிருந்து விலகியது அவர்களது விருப்பம். நாங்கள் அவர்களை கூட்டணியில் இருந்து விடுவிக்கவில்லை என்றார்.