சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக, அதிமுகவில் விருப்ப மனு கொடுத்த ஆசிரியர்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பள்ளிக் கல்வித் துறை, அதனடிப்படையில் வேட்புமனு தாக்கல்செய்த பின்னர் நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு அளித்து, நேர்காணலுக்குச் சென்ற வேளாண் துறை தற்காலிகப் பெண் அலுவலர் திலகவதியை வேளாண் துறையிலிருந்து பணியிடை நீக்கம் செய்து, உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வேறு துறையிலும் பணியாற்றும் ஊழியர்களில் யாராவது, தேர்தலில் போட்டியிட, கட்சிகளிடம் விருப்ப மனு அளித்துள்ளனரா? என விசாரிக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர், திமுகவில், 'இடம்' கேட்டு விருப்ப மனு அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள், தனி நபர்கள், திமுக நிர்வாகிகளின் உறவினர்கள் என, பலதரப்பட்ட ஆசிரியர்கள், தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளதாகத் தெரிகிறது.
அவர்களின் பெயர், அவர்கள் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள தொகுதிகளின் பட்டியல், தேர்தல் செலவுக்குத் தேவைப்படும் பொருளாதாரத்தின் பின்னணி குறித்து, பள்ளிக் கல்வித் துறை, உளவுத் துறை தரப்பில் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல்செய்வதற்கு முன்னர் தங்களை அரசுப் பணியிலிருந்து விலக்கிக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அத்துறையின் அலுவலரிடம் முறையான அனுமதி பெற வேண்டும். அதன் பின்னர்தான் வேட்புமனு தாக்கல்செய்ய முடியும்.
இதனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்ப மனு அளித்தவர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் தவித்துவருகின்றனர். ஆனால் தேர்தலில் அனுமதி பெறாமல் போட்டியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தயாராகிவருகிறது.