சென்னை: பிரேசில் நாட்டைச் சேர்ந்த உலகப்புகழ்பெற்ற டிஜே மந்த்ரா கோரா என்பவரை அழைத்து வந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் டிஜே நிகழ்ச்சி நடத்துவதாக திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று (மே 21) சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் மாலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆண், பெண் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சிக்கு, காவல் துறையிடம் எந்தவித முறையான அனுமதியும் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அண்ணா நகர் துணை ஆணையர் சிவபிரசாத் அனுமதியின்றி நிகழ்ச்சி நடத்திய ஏற்பாட்டாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரும்பாக்கம் மதுவிலக்குப் பிரிவு போலீசார் விக்னேஷ், மார்க், பரத் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்ததோடு மது விருந்தில் பரிமாற வைத்திருந்த அனைத்து மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், டிஜே மற்றும் மது விருந்தில் கலந்துகொண்ட தனியார் ஐடி கம்பெனி ஊழியரான மடிப்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் அதிக அளவில் மது மற்றும் போதைப்பொருள் உட்கொண்டதால் நடனம் ஆடிக்கொண்டு இருந்தபோது மயங்கி கீழே விழுந்தார்.