பெரம்பலூர்:வேப்பூர் அருகேயுள்ள வயலூர் கிராமத்தைச் சேர்ந்தவகள் ராஜா-ராணி தம்பதி. இவர்களது மகள் அகிலா. செவிலியர் பட்டயப்படிப்பு படித்துள்ளார்.
அகிலாவுக்கும் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு பரத்குமார், யாழினி என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக, அகிலா தனது குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், அகிலாவுக்கும் அவரது வீட்டின் அருகில் வசித்து வந்த அமரதீபன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அகிலாவும், அமரதீபனும் வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து அகிலாவின் தாய் ராணி கொடுத்த புகாரின் பேரில், குன்னம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருப்பூரிலிருந்து அகிலா - அமரதீபன் இருவரையும் அழைத்து வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
காவல்நிலையத்தில் புகார்
திருப்பூரில் இருந்தபொழுது வேலை வாங்கி தருவதாகக் கூறி, அகிலாவிடம் இருந்து ரூ.50 ஆயிரம் ரொக்கமும், 7 சவரன் தங்க நகைகளையும் அமரதீபன் வாங்கி இருக்கிறார் என்றும் அதனை திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. அமரதீபனுடன் ஏற்பட்ட மன கசப்பின் காரணமாக, தான் கொடுத்த பணத்தையும், நகைகளையும் அகிலா திருப்பிக் கேட்டுள்ளார். இதனால் இருதரப்பு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அமரதீபன் குடுப்பத்தினர் அகிலாவின் குடும்பத்தை மிரட்டியுள்ளனர்.