சென்னை: மந்தைவெளியைச் சேர்ந்த சுதா ஸ்ரீதரன் (67) என்பவரிடம் 2019ஆம் ஆண்டு மோசடி கும்பல் ஒன்று செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளது.
அப்போது, லைஃப் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி இறந்துபோன உங்களின் கணவர் ஆர்மி மருத்துவரான ஸ்ரீதரனின் இன்ஸ்யூரன்ஸ் பணம் நிலுவையில் இருப்பதாகவும், அதை பெற்றுத் தருவதாக கூறியுள்ளனர்.
பல்வேறு காரணங்களைச் சொல்லி வெவ்வேறு வங்கி கணக்குகளில் 2 கோடியே 13 லட்சம் ரூபாய் பணத்தைப் சுதா ஸ்ரீதரனிடம் இருந்து பெற்று ஏமாற்றியுள்ளனர்.
இது தொடர்பாக சுதா ஸ்ரீதரன் காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சென்னை மத்திய வங்கி மோசடி குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர். கடந்த மார்ச் 31 ஆம் தேதியன்று டெல்லியில் வசிக்கும் அமன் பிரசாத் உள்பட மோசடி கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் கைது செய்யும் பொருட்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் காவல் ஆணையர் தேன்மொழி, காவல் துணை ஆணையர் நாகஜோதி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைப் காவல்துறையினர், டெல்லியில் முகாமிட்டு தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் மூதாட்டியிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய மோசடி கும்பலைச் சேர்ந்த சிம்ரான்ஜித் சர்மா(29) என்பவரையும், கடந்த 24ஆம் தேதி தனிப்படை காவல்துறையினர் டெல்லியில் வைத்து கைது செய்தனர்.
டெல்லி திலக் நகரைச் சேர்ந்த அவர், தலைமறைவாக இருந்து வந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து திஸ்ஹசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிம்ரான்ஜித் சர்மா டெல்லியில் உள்ள கேளிக்கை விடுதியில் வேலை செய்தபோது, மோசடி கும்பலுடன் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவும், தனது ஆடம்பர வாழ்க்கைக்காகவும் மோசடி செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த கும்பல் பல நபர்களின் பெயரில் பல வங்கி கணக்குகளைத் தொடங்கி தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த பல நபர்களிடம் பல கோடி ரூபாய் வரை ஏமாற்றியிருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று (ஜூலை 27) சிம்ரான்ஜித் சர்மாவை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக இருந்துவரும் பிற குற்றவாளிகளையும் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவறான ஊசியால் தாய் உயிரிழப்பு!