சென்னை: சூளைமேடு கண்ணகி தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (42). இவருக்குத் திருமணமாகி விஜயலட்சுமி (38) என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். செல்வம் பெயிண்டிங் வேலை செய்துவந்தார்.
இவர் கடந்த 2ஆம் தேதியன்று வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து ஆம்புலன்ஸிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துவிட்டார்.
அதனைத் தொடர்ந்து செல்வத்தின் உறவினர் வீரபாண்டி என்பவர் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
புகாரின்பேரில் சூளைமேடு காவல் துறையினர் செல்வத்தின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். உடற்கூராய்வில் செல்வம் உண்ட உணவில் விஷம் கலந்திருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் இறந்துள்ளதாகவும் காவல் துறையினருக்குத் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி, அவரை அழைத்துச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்டு செங்குன்றம் மல்லிகை அவென்யூ பகுதியில் வசித்துவந்த முண்டக்கண் மோகன் (எ) மோகன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், "அரும்பாக்கம் விடுதியில் கடந்த ஆறு மாதங்களாக விஜயலட்சுமியும் மோகனும் உறவில் இருந்துவந்துள்ளனர். இதனை அறிந்த செல்வம் விஜயலட்சுமியிடம் மோகனின் பழக்கத்தைத் துண்டிக்கும்படி பலமுறை கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த விஜயலட்சுமியும், மோகனுடன் இணைந்து செல்வத்தை தீர்த்துக்கட்ட தக்க சமயத்தை எதிர்நோக்கியிருந்தனர். அவர்கள் தீட்டிய திட்டத்தின்படி, போரூர் காரப்பாக்கத்தில் உள்ள மருந்துக் கடையில் தென்னைமரத்தில் வண்டுகளை அழிக்கும் பூச்சி மருந்தை 180 ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து 2ஆம் தேதி மதியம் செல்வம் சாப்பிடக்கூடிய உணவில் அதைக் கலந்து விஜயலட்சுமி கொடுத்தார். இதையடுத்து அந்த உணவை உண்ட செல்வம் மயங்கிவிழுந்தார். மேலும் குடிப்பழக்கத்தினால் செல்வம் உடல்நலம் பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக அனைவரிடமும் விஜயலட்சுமி கூறி நம்பவைத்துள்ளார்" எனத் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து செல்வத்தின் சந்தேகம் மரண வழக்கை கொலை வழக்காக சூளைமேடு காவல் துறையினர் மாற்றம் செய்து விஜயலட்சுமி, மோகன் ஆகிய இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
மேலும் விசாரணையில் மோகன் ரவுடி சுபாஷ் பண்ணையார் கூட்டாளி என்பதும், இவர் மீது சென்னை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏழு கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதையும் படிங்க: களேபரமான கல்யாண வீடு: போதையில் குத்தாட்டம்... 3 பேருக்கு கத்திக்குத்து!