தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

ஏடிஎம் கார்டுகள் மூலம் பணம் திருட்டு - ஒருவர் கைது! - CHENNAI ATM FRAUD

ஏடிஎம் மையங்களில் தவறவிடும் ஒய்ஃபை கார்டுகள் மூலம் தொடர்ந்து பணம் திருடிய கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

வைஃபை ஏடிஎம் கார்டு மூலம் திருடியவர் கைது
வைஃபை ஏடிஎம் கார்டு மூலம் திருடியவர் கைது

By

Published : Jul 7, 2021, 7:21 AM IST

சென்னை: சின்மயா நகரை சேர்ந்த மனோகரா(32) என்பவர் கோயம்பேடு காவல் நிலையத்தில் ஜூலை 1ஆம் தேதி புகார் ஒன்றை அளித்தார். அதில், "கடந்த ஜூன் 28ஆம் தேதி சின்மயா நகரில் உள்ள ஐசிஐசிஐ வங்கி ஏடிஎம் மையத்தில் 1,500 ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு தனது ஒய்ஃபை ஏடிஎம் கார்டை அங்கு மறந்துவிட்டு சென்றுவிட்டேன்.

பின்பு, தவறவிட்ட கார்டிலிருந்து அன்றே 25,000 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது. " என மனோகரா குறிப்பிட்டிருந்தார்.

சைபர் கிரைம் விசாரணை

அந்த புகாரின்பேரில், கோயம்பேடு சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அந்த ஏடிஎம் கார்டிலிருந்து பணம் எடுத்த இடத்தினை டிராக் செய்தனர். அப்போது, கீழ்ப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் அந்த கார்டிலிருந்து பணம் ஸ்வைப் செய்தது தெரியவந்தது.

பெட்ரோல் பங்கில் 'ஸ்வைப்'

இதனையடுத்து, காவல்துறையினர் விரைந்து அந்த பெட்ரோல் பங்கிற்கு சென்று விசாரித்த போது, ஒரு நபர் அடிக்கடி வந்து தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி மிகவும் கெஞ்சி ஒரு ஒய்ஃபை கார்டு மூலம் 5 ஆயிரம் ரூபாயாக பல முறை ஸ்வைப் செய்துள்ளார்.

அவர் மீது சந்தேகம் ஏற்படவே, அந்த நபரை புகைப்படம் எடுத்துவைத்ததாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் அந்த நபரை தேடி வந்தனர்.

கரூரைச் சேர்ந்தவர்

இதுதொடர்பாக, கரூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்தனர். மணிகண்டன் சேலத்தில் நகைப்பட்டறையில் பணிப்புரிந்து வந்துள்ளார்.

கரோனா ஊரடங்கினால் வேலையின்றி தவித்த மணிகண்டன், கடந்த ஓராண்டாக புரசைவாக்கம் துர்கா மேன்சனில் தங்கி சௌகார்பேட்டையில் உள்ள ஜுவல்லரி கடைகளுக்கு புரோக்கராக பணிபுரிந்து வந்துள்ளார்.

பெட்ரோல் பங்கின் சிசிடிவி காட்சிகள்

முதல் தடவை சிக்கவில்லை, அதனால்...

மணிகண்டன் ஒருநாள் ஏடிஎம் மையத்திற்கு பணம் எடுக்க சென்ற போது அங்கு கிடைத்த ஒரு ஒய்ஃபை கார்டை எடுத்து பெட்ரோல் பங்கில் கொடுத்து பணத்தை பெற்றபோது, காவல்துறையிடம் சிக்காமல் இருந்துள்ளார்.

இதையே, மணிகண்டன் தொழிலாக மாற்றியுள்ளார். குறிப்பாக, ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுக்க வரும் பொதுமக்களில் சிலர் ஏடிஎம் கார்டை மறந்து தவறவிட்டு செல்வது வழக்கம்.

அதன்பின்னர், வரக்கூடிய நபர் அந்த ஏடிஎம் கார்டை ஓரமாக வைத்துச்செல்வார்கள். இந்த ஏடிஎம் கார்டுகளை மட்டுமே மணிகண்டன் குறிவைத்து திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

ஒய்ஃபை கார்டு மட்டுமே

குறிப்பாக, அதிலும் ஒய்ஃபை ஏடிஎம் கார்டை மட்டுமே திருடி சென்று, பெட்ரோல் பங்கில் அவசர தேவைக்காக பணம் வேண்டும் என கெஞ்சுவது போல் நடித்து பணத்தை பெற்று செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

மேலும், ஒய்ஃபை ஏடிஎம் கார்டு என்பதால் சம்மந்தப்பட்ட நபருக்கு ஓடிபி குறுஞ்செய்தி செல்லாமல் ஒய்ஃபை கார்டை ஸ்வைப் செய்து மட்டுமே எளிதாக பணத்தை கொள்ளையடிக்கலாம் போன்ற தகவல்களை மணிகண்டன் விசாரணையில் தெரிவித்தார்.

பல இடங்களில் கைவரிசை

இதேபோல், சென்னையில் பல இடங்களில் ஒய்ஃபை ஏடிஎம் கார்டை திருடி பல பெட்ரோல் பங்கில் மணிகண்டன் திருடியது விசாரணையில் தெரியவந்தது. மணிகண்டனிடம் இருந்து ஆறு ஒய்ஃபை ஏடிஎம் கார்டுகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க: ஐ.சி.எஃப் தொழிற்சாலை முன்னாள் முதன்மை பொறியாளரிடம் சிபிஐ விசாரணை

ABOUT THE AUTHOR

...view details