கொல்லம்: திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்பார்கள். ஆனால், இங்கே ஒரு பெண் திருமணத்தால் அந்த சொர்க்கத்துக்கே வழிதேடி சென்றுள்ளார். நெஞ்சை கசக்கி பிழியும் இந்தச் சம்பவம் குறித்து பார்க்கலாம்.
கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதான ஆயுர்வேத மருத்துவர் விஸ்மயா. இவருக்கும் கிரண் குமார் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தின்போது கிரண் குமாருக்கு ரூ.11 லட்சம் மதிப்பிலான கார், 100 பவுன் தங்க நகை மற்றும் 1.25 ஏக்கர் நிலம் வரதட்சணையாக கொட்டி கொடுக்கப்பட்டது.
சடலமாக மீட்பு
ஆனாலும், தனது தகுதிக்கு குறைவான வரதட்சணை கொடுக்கப்பட்டதாக எண்ணிய கிரண் குமார் மகிழ்ச்சியின்றி காணப்பட்டுள்ளார். இதன் காரணமாக விஸ்மயாவை தொடர்ச்சியாக அடித்து துன்புறுத்திவந்துள்ளார். ஒருகட்டத்தில் சித்ரவதைகள் அதிகரிக்க தனது உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார் விஸ்மயா. அவர்களும் சமாதானம் செய்துவைத்து, கிரண் குமாருடன் சேர்ந்து வாழும்படி கூறியுள்ளனர்.
இதற்கிடையில் கடந்த வாரம் கிரண் குமாரின் சித்ரவதைகள் அத்துமீறி செல்ல, நடந்த விஷயங்களை பெற்றோர், உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பியுள்ளார் விஸ்மயா. இது நடந்த அடுத்த சில தினங்களில், திங்கள்கிழமை (ஜூன் 21) கிரண் குமார் வீட்டில் உள்ள குளியலறையில் விஸ்மயா சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரின் உடற்கூராய்வு அறிக்கையில் விஸ்மயா கடும் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.