திருப்பத்தூர்: முன்னாள் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததைத் தொடர்ந்து, அவரது வீட்டில் செப்., 16 ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையில், ரொக்கப்பணம், அந்நிய செலாவணி டாலர், 9 சொகுசு கார்கள், 5 ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், தங்க வைர நகைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
மேலும், கே.சி.வீரமணி வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 275 யூனிட் மணல் சிக்கியது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை கனிமவளத்துறைக்கு தகவல் கொடுத்தது.
அதன் பேரில் நேற்றிரவு (செப்., 18) வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமவளத்துறை அலுவலர்கள் கே.சி.வீரமணி வீட்டின் பின்புறம் கொட்டி வைக்கப்பட்டுள்ள மணலை அளவீடு செய்ததில், 551 யூனிட் மணல் இருப்பதாக தெரியவந்துள்ளது.