வேலூர்: காட்பாடி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவர் 2010ஆம் ஆண்டுமுதல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்துவந்தார்.
இவர் பணியில் சேரும்போது அனுபவச் சான்றிதழ் பல்கலைக்கழகத்தின் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. அப்போது, பன்னீர்செல்வம் 1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை எ.வி.எம்.எம். கல்லூரியில் பணிபுரிந்ததாகவும், தஞ்சாவூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2004 - 2006ஆம் ஆண்டுவரை பணிபுரிந்ததாகவும் சான்றிதழ் வழங்கியுள்ளார்.
வழக்குப்பதிவும், பணிநீக்கமும்
இந்தச் சான்றிதழ்கள் போலியாகத் தயார் செய்யப்பட்டவைபோல் உள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளருக்குச் சந்தேகம் எழுந்தது. அதைத் தொடர்ந்து அசல் சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க பல்கலைக்கழகப் பதிவாளர் சையது சஃபி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் அனைத்தும் போலியாக அவரே தயார் செய்தவை என்பது தெரியவந்தது. பின்னர் 2019ஆம் ஆண்டு பல்கலைக்கழக நிர்வாகம் அவரைப் பணியிடை நீக்கம்செய்தது. இது குறித்து, வேலூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவாளர் சையது சஃபி இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார்.