சென்னை: பேருந்துகளில் பயணிப்போரின் கவனத்தை சில்லறைகளை சிதறவிட்டு கவனத்தை திசை திருப்பி திருட்டில் ஈடுபட்டு வந்த இரு பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நகைகள் திருட்டு
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சேகர் (65) ஜனவரி மாதம் ஆந்திராவிலிருந்து 27 சவரன் தங்க நகைகளை பாலிஷ் செய்வதற்காக எடுத்து கொண்டு பேருந்தில் பயணம் செய்துள்ளார். சென்னை பிராட்வே வந்துள்ள அவர் பின்னர் பையை திறந்து பார்த்த போது அதில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதைத்தொடர்ந்து சேகர் அளித்த புகாரின் பேரில் எஸ்பிளனேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வந்துள்ளனர்.
சிசிடிவி மூலம் சிக்கிய இரு பெண்கள்
அப்போது இரண்டு பெண்கள் பேருந்தில் இருந்து இறங்குவது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து காட்சிகளில் பதிவான அடையாளங்களை வைத்து அந்த இரு பெண்களையும் அடையாளம் கண்டு அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்தப் பெண்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தீபா(32), நந்தினி(25) ஆகிய இருவரும் இணைந்து முதியவர்களின் கவனத்தை திசை திருப்பி தமிழ்நாடு முழுவதும் தொடர் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
இதுதொடர்பாக காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது:
கவனத்தை திசை திருப்பி கொள்ளை
குறிப்பாக இவர்கள் இருவரும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து கோயம்பேடு, பிராட்வே போன்ற கூட்டம் நிறைந்த பேருந்து நிலையங்களுக்கு செல்வார்கள். பின்னர் அதிகமான கூட்டத்துடன் வெளியூர் செல்லும் பேருந்துகளில் ஏறி முதியவர்களை குறிவைத்து ரூ. 10, 20 நோட்டுகளை கீழே போட்டு உங்களது ரூபாயா என அவர்களது கவனத்தை திசை திருப்புவார்கள்.
அப்போது ரூபாயை எடுக்கும் சமயத்தில் பிளேடு மூலம் அவர்களின் பையை கிழித்து தங்க நகை, பணம் என கொள்ளையடித்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்கள். அதேபோல் நகை அணிந்திருப்பவர்களிடம் கழுத்தில் செயின் அறுந்துள்ளதாக கூறி, அவர்கள் செயினை கழட்டி பையில் வைத்தவுடன் அதை திருடுவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
கொள்ளையடித்த பணத்தில் உல்லாசம்
கொள்ளையடித்த நகைகளை ஆந்திராவுக்கு எடுத்துச் சென்று உல்லாசமாக இருந்துவிட்டு, பணம் தீர்ந்தவுடன் மீண்டும் சென்னைக்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதே பாணியில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பேருந்துகளில் செல்வோரின் கவனத்தை திசை திருப்பி நகை, பணம் கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது.
தமிழ்நாடு முழுவதும் 10க்கும் மேற்பட்ட வழக்குகள்
இவர்கள் இருவர் மீதும் உடுமலை பேட்டை, அடையாறு, சிவகாஞ்சி என 10க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தனர்.
தற்போது இந்தப் பெண்களிடம் 24 சவரன் நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சார்ஜாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!