தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலைத் தடுப்பதற்கு பல்வேறு தனிப்படைகள் அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரோந்துப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் தலைமையில் காவலர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது, ஆறுமுகநேரி சோதனைச்சாவடி அருகே காயல்பட்டினம் மன்னர் ராஜா கோவில் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் (32) சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்த காவலர்கள், அவரிடமிருந்து நான்கு கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர். இது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.