சென்னை:தமிழ்நாடு காவல் துறையில் வாக்கி-டாக்கி, சிசிடிவி, டிஜிட்டல் செல்போன்கள் போன்ற தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்க தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தப் பணிகளுக்கான டெண்டரை, தமிழ்நாடு காவல் துறையில் உள்ள தொழில்நுட்பச் சேவைப் பிரிவு மேற்கொண்டது.
இந்நிலையில், டெண்டர் கொடுத்ததில் 300 கோடி ரூபாய்வரை முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்தனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்
குறிப்பாக, வி-லிங்க் என்ற நிறுவனத்திற்கு மட்டுமே அதிகளவில் டெண்டர் விடப்பட்டதில் தமிழ்நாடு அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து முறைகேட்டில் ஈடுபட்ட தொழில்நுட்பப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அன்புசெழியன், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்கள் உதயசங்கர், ரமேஷ் உள்பட 14 காவல் துறை அலுவலர்களின் இடங்களிலும், டெண்டர் எடுத்த வி.லிங்க் உள்பட இரண்டு நிறுவனங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல்செய்யப்பட்டன.
வெளியானது எஃப்.ஐ.ஆர்.
மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை, அதன் இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். ஆனால் தொழில்நுட்ப உபகரணங்கள் டெண்டர் முறைகேடு தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட வழக்கின், முதல் தகவல் அறிக்கை லஞ்ச ஒழிப்புத் துறை இணையத்தில் நீண்ட நாள்களாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், இந்த வழக்குத் தொடர்பான முதல் தகவல் அறிக்கை நேற்றிரவு (ஆக. 20) வெளியாகியுள்ளது. குறிப்பாக, 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் டெண்டர் முறைகேட்டில் தொடர்புடைய 14 காவல் துறையினரின் விவரங்களும் வெளியாகியுள்ளன.
வழக்குப்பதிவு செய்யப்பட்டோரின் விவரங்கள்
- அன்புச்செழியன், தொழில்நுட்பப் பிரிவு காவல் கண்காணிப்பாளர்
- ரமேஷ், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
- மோகன், காவல் ஆய்வாளர்
- தமிழரசன், காவல் ஆய்வாளர்
- மாரியப்பன், காவல் ஆய்வாளர்
- மைதிலி, காவல் ஆய்வாளர்
- லதா, ஓய்வு பெற்ற காவல் துணைக் கண்காணிப்பாளர் - தொழில்நுட்பப் பிரிவு
- ஞானமுருகன், காவல் ஆய்வாளர்
- உதய சங்கர், காவல் கூடுதல் கண்காணிப்பாளர்
- ஞானவேல், காவல் ஆய்வாளர்
- அஜீதா, காவல் ஆய்வாளர்
- தனபால், காவல் உதவி ஆய்வாளர்
- ஆண்டனி முத்து தங்கராஜ், காவல் ஆய்வாளர்
- ஜெயந்த், காவல் ஆய்வாளர்