திருவள்ளூர்: திருத்தணி அடுத்த தாடூர் காலனியை சேர்ந்தவர் அன்புராஜ். இவரது மகன் ராசுகுட்டி(25). ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். இவரும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த உறவுக்கார பெண் கீர்த்தனாவும் (22) காதலித்துள்ளனர்.
அந்த பெண் ராசுகுட்டிக்கு தங்கை முறை என்பதால் இரு தரப்பு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் அதையும் மீறி இருவரும் பதிவு திருமணம் செய்துகொண்டதாக தெரிகிறது. இதையறிந்த இரு வீட்டினரும், இருவரையும் பிரித்து அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனிடையே கடந்த வாரம் ராசுகுட்டி, திருத்தணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சாய்பிரனீத்திடம் கொடுத்த புகாரில், 'நான் காதலித்து திருமணம் செய்த உறவுக்கார பெண் கீர்த்தனாவை தன்னிடம் சேர்த்துவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
மாயமான ராசுகுட்டி
அதன் அடிப்படையில், திருத்தணி அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், ராசுகுட்டி, அவரது பெற்றோர், உறவினர்களை விசாரணைக்கு அழைத்தபோது, பெண் வீட்டிலிருந்து யாரும் காவல் நிலையத்துக்கு வரவில்லை என்று தெரிகிறது.
நீதி வேண்டி உறவினர் சாலை மறியல்! இதனிடையே, கடந்த வெள்ளிக்கிழமை அக்டோபர் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வேலைக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிளம்பிய ராசுகுட்டி, பின்னர் வீடு திரும்பவில்லை. அவரது கைபேசிக்கு அழைத்தபோது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
ராசுகுட்டி கொலை
இதனால் பதறிப்போன ராசுகுட்டி உறவினர்கள், பல இடங்களில் அவரைத் தேடி கண்டுபிடிக்க முடியாததால், காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தனிப்படை அமைத்து ராசுகுட்டியை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெரியபாளையம் அருகே ஆரணி ஆற்றின் கரையில் உள்ள செங்காத்தாகுளம் பகுதியில் ராசுகுட்டி வெட்டுக்காயங்களுடன் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த பெரியபாளையம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
நீதி வேண்டி போராட்டம்
இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி திருத்தணி டிஎஸ்பி அலுவலகம் முன் ராசுகுட்டி உறவினர்களும், ஊர் பொதுமக்களும் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருத்தணி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரன், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ராசுகுட்டியை கொலை செய்தவர்களை தேடி வருவதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல் துறையினர் அளித்த உறுதியை அடுத்து, போராட்டகாரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 2 மணிநேரமாக நடந்த போராட்டத்தினால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையும் படிங்க:சாலையில் கிடந்த பள்ளத்தால் இளைஞர் உயிரிழப்பு - நெடுஞ்சாலைத் துறையிடம் விளக்கம் கேட்ட போலீஸ்