தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / crime

தலைநகரில் தலைவிரித்தாடும் வழிப்பறி: இருவர் கைது - chennai theft

மயிலாப்பூரில் கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் நகை, செல்போன் பறிக்கப்பட்டுள்ளது. புகாரளிக்க வந்த இளைஞரிடம், 'சம்பவம் நிகழ்ந்த இடம் தங்கள் காவல் எல்லைக்கு உட்பட்டதல்ல' எனக் காவல் துறையினர் அலைக்கழித்துள்ளனர். இது தொடர்பாக உயர் அலுவலர்களுக்குத் தகவல் தெரியவர, விசாரணைக்கு உத்தரவிட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள்
கொள்ளை தொடர்பான சிசிடிவி காட்சிகள்

By

Published : Aug 26, 2021, 7:41 AM IST

Updated : Aug 26, 2021, 9:17 AM IST

சென்னை: இளைஞரை மிரட்டி நகை, செல்போன் பறித்துச் சென்ற இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை மடிப்பாக்கத்தை சேர்ந்த மோகன்ராஜ், மயிலாப்பூர் ஆர்.கே. சாலை பகுதியில் இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக கஞ்சா போதையில் வந்த இருவர், திடீரென கையில் வைத்திருந்த கத்தியைக் காட்டி மோகன்ராஜை மிரட்டி கழுத்திலிருந்த ஒரு சவரன் நகை, செல்போனை பறித்துவிட்டு வண்டியையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றனர்.

இதையடுத்து மோகன்ராஜ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றார். அப்போது சம்பவம் நடந்த இடம் ராயப்பேட்டை காவல் நிலைய எல்லையில் இருப்பதாகக் கூறி புகாரைப் பெறாமல் அப்பகுதி காவல் துறையினர் அனுப்பிவைத்துள்ளனர்.

இதனையடுத்து மோகன்ராஜ், ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது, அவர்களும் சம்பவம் நிகழ்ந்த இடம் மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்டது எனக் கூறி அனுப்பிவைத்துள்ளனர். இதேபோல் மோகன்ராஜ் நான்கு முறை அலைந்து திரிந்த விரக்தியில், புகாரே கொடுக்க வேண்டாம் என மனமுடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மோகன்ராஜை அலைக்கழித்த தகவல், கிழக்கு மண்டல இணை ஆணையர் ராஜேந்திரனுக்கு தெரியவர, உடனடியாகப் புகாரைப் பெறும்படி உதவி ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் வீட்டிற்குச் சென்று மோகன்ராஜிடம் புகாரைப் பெற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி ஆய்வு

சம்பவம் நடந்த ஆர்.கே. சாலையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவின் காட்சிகளை காவல் துறையினர் ஆய்வுசெய்தனர். அதில் பதிவான வழிப்பறியர்களின் முக அடையாளங்களைக் கொண்டு, அவ்வழியே உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் தொடர்ச்சியாக ஆய்வுசெய்தனர்.

வழிப்பறிக்குப் பயன்படுத்திய வாகனம்

சிக்கிய வழிப்பறியர்கள்

அதன்மூலம் பள்ளிக்கரணை பகுதியில் வழிப்பறியர்கள் சென்றது கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்தது. இதனையடுத்து பதிவான அடையாளங்களை வைத்து பள்ளிக்கரணையில் பதுங்கியிருந்த இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் பள்ளிக்கரணை நன்மங்கலம் பகுதியைச் சேர்ந்த ஜீவானந்த் (22), மேடவாக்கத்தைச் சேர்ந்த மாணிக்கம் (24) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் அன்னை சத்யா நகர் பகுதியில் கஞ்சா வாங்கி அடித்துவிட்டு, மயிலாப்பூர் வழியாகச் செல்லும்போது மோகன்ராஜிடம் நகை, செல்போனைப் பறித்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.

வழிப்பறி தொடர்பான சிசிடிவி காட்சி

ஏற்கெனவே ஜீவனாந்த் மீது அடிதடி வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 60 சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து கொள்ளையர்களைக் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது. கைதுசெய்யப்பட்ட இரண்டு நபர்களையும் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, காவல் துறையினர் சிறையிலடைத்தனர்.

Last Updated : Aug 26, 2021, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details