சென்னை: ஒருங்கிணைந்த குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு சென்னை பகுதியில் வெளிநாட்டவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக வெளிநாட்டவர்கள் குறித்த சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் ஊபர் கால் டாக்ஸி மூலமாக சந்தேகத்துக்கிடமாக தான்சானியா நாட்டைச்சேர்ந்த பிரிஸ்கா ஹம்சா என்ற பெண் போதைப்பொருளை எடுத்துச்செல்வது குறித்த தகவல் வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து அவரை நிறுத்தி விசாரணை செய்தபோது அவரிடம் 10 கிராம் கோக்கைன் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது. பின், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த 2018ஆம் ஆண்டு மும்பை வந்திருக்கிறார்.
அதன்பின்பு பெங்களூரு வந்து அதன் பின்பாக சென்னை கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் தங்கி இருக்கிறார். விசா காலம் முடிந்தும் இந்தியாவில் அவர் தங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர் போதை கும்பல்களுடன் தொடர்பு ஏற்பட்டு கோக்கைன் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஒரு கிராம் கோக்கைனை 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்று வந்திருக்கிறார். மொத்தமாக 10 கிராம் கோக்கைனை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு அண்ணா நகரில் ஒருவருக்கு விற்க வந்த போது போலீசார் கையும் களவுமாக அவரைப் பிடித்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனைக்கு யார் யாரெல்லாம் உதவினார்கள், அவர் வந்த ஊபர் காரின் ஓட்டுநர் மற்றும் கிழக்கு கடற்கரைச்சாலையில் அவர் தங்கி இருக்கக்கூடிய வீட்டின் உரிமையாளர் ஆகியோரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பெண்ணை அண்ணாநகர் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:ஜெயின் கோயில் கதவை உடைத்து நகை திருட்டு - கைவரிசை காட்டியவர்களுக்கு போலீசார் வலைவீச்சு..!