சென்னை, சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பாலாஜி (50). இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.
முன்னதாக சர்க்கரை நோய் காரணமாக பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார். மேலும், தினமும் மதுஅருந்திவிட்டு குடும்பத்தினருடன் பிரச்னை செய்வதை பாலாஜி வழக்கமாகக் கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (மார்ச்.22) காலை பணி முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பாலாஜி, சாப்பிட்டுவிட்டு தனது அறைக்குச் சென்றுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் பாலாஜி வெளியே வராத நிலையில், சந்தேகமடைந்த மகன்கள் கதவைத் தட்டி பார்த்துள்ளனர். எனினும் கதவு திறக்கப்படாத நிலையில், கதவை உடைத்து பார்த்தபோது, பாலாஜி மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் சைதாப்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர், பாலாஜியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ’சந்தேக மரணம்’ என வழக்குப்பதிவு செய்துள்ளசைதாப்பேட்டை காவல் துறையினர், வேலைப்பளு காரணமாக பாலாஜி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சொத்துத் தகராறில் அண்ணன் மனைவியைக் கொன்ற தம்பி!