சென்னை: பயிற்சியாளர் மீது வீராங்கனை பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன் 20க்கும் மேற்பட்ட பயிற்சி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் தமிழ்நாடு மாநில தடகள சம்மேளனத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், "தடகள பயிற்சியாளரான நாகராஜன் பாரிமுனையில் சொந்தமாக விளையாட்டு பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அங்கு, தடகள வீராங்கனையாக சாதிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகள் பலர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த மையத்தில், விளிம்பு நிலை மாணவிகளுக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். வேறு பயிற்சி மையத்திற்கு மாற முடியாமலும், பாலியல் தொந்தரவை வெளியே சொல்ல முடியாமலும் மாணவிகள் இருக்கின்றனர். மேலும், நாகராஜன் ஒய்.எம்.சி.ஏவில் உள்ள தனது வீட்டில் வைத்து 16 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த போது, அப்பெண் நாகராஜனை கொல்லவும், தன் உயிரை மாய்த்துக் கொள்ளவும் முடிவெடுக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல், பயிற்சி முடிந்த பின்பு ஒரு மாணவியை மட்டும் இருக்க செய்து, நாகராஜன் பாலியல் தொல்லை கொடுப்பதாக அவரிடம் பயிற்சிபெறும் பல மாணவிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு சுமார் 20க்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவிகளுக்கு நாகராஜன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்” என்றிருந்தது.
சமூக வலைதளங்கள் வாயிலாக குவியும் புகார்கள்
பயிற்சியாளர் நாகராஜனால் பாலியல் தொந்தரவுக்குள்ளான வீராங்கனைகள் பலர் விளையாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே நாகராஜன் குறித்து பெண் ஒருவர் புகார் அளித்தபோது, அந்த பெண் காதலிப்பதை கண்டித்ததால், தன் மீது பொய் புகார் சுமத்தியதாகக் கூறி நாகராஜன் தப்பித்து கொண்டதாக தடகள சம்மேளன தலைவர் லதா தெரிவித்துள்ளார்.
வாட்ஸ்அப்-ல் மாணவி அளித்துள்ள புகார் சமூக வலைதளங்களின் வாயிலாக, தனியார் விளையாட்டு பயிற்சி மையத்தில் பயிற்சி பெறக்கூடிய பல மாணவிகளும், பெற்றோர்களும் தொடர்ந்து பயிற்சியாளர் நாகராஜன் மீது பாலியல் புகார் சுமத்தி வருவதால், இவ்விவகாரம் கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் கவனத்துக்குச் சென்றுள்ளது. இதனையடுத்து இந்த பாலியல் புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணையை அவர்கள் தொடங்கியுள்ளனர். பயிற்சியாளர் நாகராஜன் சுங்கதுறை கண்காணிப்பாளராகவும் பணிப்புரிந்து வருவது தெரியவந்துள்ளது.
பிஎஸ்பிபி பள்ளி பாலியல் வழக்கு
சென்னையில், சமீபத்தில் கே.கே நகரில் இயங்கி வரக்கூடிய பிஎஸ்பிபி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ராஜகோபாலனை போக்சோவில் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து பல மாணவிகள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டு புகாரளிக்க முடியாமல் தவித்து வருவதை எண்ணி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையர் ஜெயலட்சுமி கைபேசி எண் ஒன்றை வழங்கினார்.
அதில் இதுவரை 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி பல மாணவிகள் சமூக வலைதளங்கள் வாயிலாக பாலியல் புகார்களை தெரிவித்து வருகின்றனர்.